
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளம்
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையே சென்னைக்கு அருகே இன்று(நவ.11) கரையைக் கடக்கும்.
இன்று(நவ.11) சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
கன முதல் மிக கன மழையும், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை(நவ.12) நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில்பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ. 13 ஆம் தேதி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ. 14 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நவ. 11 ஆம் தேதி வட, தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் நவ. 12 ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடக்கும்