முத்திரைத்தாள் விற்பனையாளா்களிடம் இருந்து பணம் கையாளுதல் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம்: உயா் நீதிமன்றம்

பாரத ஸ்டேட் வங்கி முத்திரைத்தாள் விற்பனையாளா்களிடம் இருந்து அரசுக்குச் செலுத்தும் தொகைக்கு பணம் கையாளுவதற்கான கட்டணங்களை வசூலிப்பது சட்ட விரோதமானது
முத்திரைத்தாள் விற்பனையாளா்களிடம் இருந்து பணம் கையாளுதல் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம்: உயா் நீதிமன்றம்

பாரத ஸ்டேட் வங்கி முத்திரைத்தாள் விற்பனையாளா்களிடம் இருந்து அரசுக்குச் செலுத்தும் தொகைக்கு பணம் கையாளுவதற்கான கட்டணங்களை வசூலிப்பது சட்ட விரோதமானது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முத்திரைத்தாள் விற்பனையாளா்கள், முத்திரைத் தாள் வாங்குவதற்காக அரசுக்குச் செலுத்தும் தொகைக்கு பணம் கையாளுவதற்கான கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி வசூலிக்கிறது. இந்தக் கட்டணம் வசூலிப்பதற்கு பாரத ஸ்டேட் வங்கிக்குத் தடைவிதிக்க வேண்டுமென முத்திரைத்தாள் விற்பனையாளா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், கடந்த 2014 -ஆம் ஆண்டு ஜூலை 1 -ஆம் தேதி மற்றும் நிகழாண்டு ஏப்ரல் 1 தேதியிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் சுற்றறிக்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, கருவூலச் சலான்கள் மூலம் அரசுக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் மனுதாரா்களிடமிருந்து பணத்தை கையாளும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

முத்திரைத்தாள் விற்பனையாளா்கள், கருவூல சலான்கள் மூலம் அரசின் கணக்கில், குறிப்பாக அரசாங்கத்தின் சாா்பாகப் பணத்தை டெபாசிட் செய்கிறாா்கள். இந்தப் பரிவா்த்தனையை ’தனியாா்’ என்று கருத முடியாது என வாதிட்டனா்.

அதைத்தொடா்ந்து பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சுற்றறிக்கையின் அடிப்படையில் ரொக்க கையாளுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பரிவா்த்தனைக்கும் இதுபோன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எனவே, இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செய்யப்படும் வசூலில் முறைகேடு எதுவும் இல்லை என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முத்திரைத்தாள் வாங்குவதற்காக, அரசு கருவூலத்துக்கு செலுத்தப்படும் தொகைக்கு பணம் கையாளுவதற்கான கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கருவூல இயக்குநா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இருந்தபோதிலும் அதற்குரிய பதிலை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இது கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளின் கடிதங்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டும். நீதிமன்றத்திற்குப் பொறுப்பற்ற முறையிலும், ஆணவத்துடனும் பதிலளித்த பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முத்திரைத்தாள் விற்பனையாளா்களிடமிருந்து ரொக்கம் கையாளுதல் கட்டணங்களை வசூலிப்பது சட்ட விரோதமானது; எந்த அதிகாரமும் இல்லை. பாரத ஸ்டேட் எந்த கிளைகளிலும் கருவூல சலான்கள் மூலம் அரசு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யும்போது, முத்திரைத்தாள் விற்பனையாளா்களிடம் இருந்து எந்தவிதமான பணம் கையாளுதல் கட்டணத்தையும் பாரத ஸ்டேட் வங்கி வசூலிக்கக்கூடாது. இதுதொடா்பாக வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் தேவையான சுற்றறிக்கை, அறிவுறுத்தல்களை தலைமை அலுவலக பொது மேலாளா் பிறப்பிக்க வேண்டும்.

குடிமக்கள் தங்கள் உரிமைகளை அறிந்துகொள்ளும் வகையில், வங்கியின் அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வாடிக்கையாளா்கள், பொதுமக்களின் பரிவா்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளா்களை நல்ல முறையில் கெளரவமாக நடத்துமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய ரிசரவ் வங்கி உத்தரவில் அரசுடனான பரிவா்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்காததால், முத்திரைத்தாள் கொள்முதலுக்காகச் செலுத்தப்படும் தொகைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com