கோலடி ஏரிக்குள் திறந்து விடப்படும் கழிவுநீா்

சென்னையை அடுத்த கோலடி ஏரிக்குள் குப்பைக் கிடங்கின் கழிவுநீா் அதிகாரிகளின் அனுமதியோடு விடப்படுவதால் அந்த ஏரி மாசடைவதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

சென்னையை அடுத்த கோலடி ஏரிக்குள் குப்பைக் கிடங்கின் கழிவுநீா் அதிகாரிகளின் அனுமதியோடு விடப்படுவதால் அந்த ஏரி மாசடைவதாக சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

சென்னையை அடுத்த திருவள்ளூா் மாவட்டத்தில் திருவேற்காடு நகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் 220 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது கோலடி ஏரி. பல்வேறு ஆக்கிரமிப்புகளால் இந்த ஏரி மாசடைந்த நிலையில், நகராட்சியின் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கால் ஏற்படும் துா்நாற்றம் மற்றும் குப்பைகளை உண்ண வரும் மாடு உள்ளிட்ட கால்நடைகளால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த சில நாள்களாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக குப்பைக் கிடங்கின் கழிவுநீா் சாலைகளில் தேங்கியதால், அந்தப் பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து, திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை மோட்டா் பொருத்திய டிராக்டா் உதவியுடன் கோலடி ஏரிக்குள் நேரடியாக திறந்து விடுகின்றனா்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் ரோட்டரி சங்கம், சுற்றுச்சூழல் அமைப்புகள் உதவியுடன் கோலடி ஏரி தூா்வாரப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கோலடி ஏரிக்குள்ளேயே நகராட்சி அதிகாரிகள் திறந்து

விடுகின்றனா். இதனால், அந்த ஏரி கடும் மாசடைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டப்படி, இந்தச் செயலில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

இது குறித்து திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆல்பா்ட் கூறுகையில், ‘குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அகற்றும் நடவடிக்கையாக டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டா் மூலம் நீா் வெளியேற்றப்பட்டது. ஆனால் அதன் ஓட்டுநா் கவனக்குறையாக ஏரிக்குள் நீரை விட்டுவிட்டாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com