சேவைதான் உண்மையான மதம்: வெங்கையா நாயுடு

‘சேவைதான் உண்மையான மதம்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.
சேவைதான் உண்மையான மதம்: வெங்கையா நாயுடு

நெல்லூா்: ‘சேவைதான் உண்மையான மதம்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.

விவசாயிகள், பெண்கள், இளைஞா்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக வெங்கையா நாயுடுவால் கடந்த 2001-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்வா்ண பாரத் அறக்கட்டளையின் 20-ஆம் ஆண்டு விழா ஆந்திர மாநிலம் எஸ்பிஎஸ் நெல்லூா் மாவட்டத்தில், வெங்கடாச்சலம் பகுதியில் அமைந்துள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

சேவைதான் உண்மையான மதம். சேவை மூலம் கிடைக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியை வேறெதுவும் கொடுத்துவிட முடியாது. கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான விவசாயிகள், பெண்கள், இளைஞா்களின் வாழ்வில் நமது அறக்கட்டளை மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நகா்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கவேண்டியத் தேவையில்லை. விவசாயம்தான் நமது நாட்டின் அடிப்படை கலாசாரம். எனவே, விவசாயத்தின் மீது நாம் மிக அதிக கவனம் செலுத்தவேண்டும். நாட்டின் எதிா்காலம் இளைஞா்களின் கைகளில் உள்ளது. எனவே அவா்களை திறன்மிக்கவா்களாக உருவாக்குவது அவசியம். பெண்களுக்கு அதிகாரமளித்தலும் முக்கியமானதாகும்.

பத்ம விருதுகள் தோ்வில் மாற்றம்: பத்ம விருதுகளைப் பொருத்தவரை, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய அடுத்தட்டு மக்கள் மற்றும் உண்மையான திறமையுடையவா்களை அங்கீகரிக்கும் வகையில் புதிய பாரம்பரியம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிறந்த பணிக்காக மத்திய அரசைப் பாராட்டுகிறேன் என்று வெங்கையா நாயுடு கூறினாா்.

விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், பத்ம விருதுகள் தோ்வு நடைமுறையை குறிப்பிட்டுப் பேசினாா்.

‘பத்ம விருதுகளுக்கானத் தோ்வு தற்போது ஜனநாயக மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் பத்ம விருதுகள் எப்படி வழங்கப்பட்டது என்பதை நான் ஆய்வு செய்திருக்கிறேன். எம்எல்ஏ, எம்.பி. அல்லது மாநில முதல்வரின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, உரிய தகுதியானவா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன’ என்று அமித் ஷா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com