
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் ஹெச்.ராஜா.
அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா ஸ்ரீவில்லிபுத்தூா் நடுவா் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
விருதுநகரில் கடந்த 17.09.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளையும், அவா்களது குடும்பத்தினரையும் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் விருதுநகா் பஜாா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க- ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மீது பணமோசடி வழக்கு
அதன் அடிப்படையில் ஹெச்.ராஜா மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் நடுவா் நீதிமன்றம் எண் 2 இல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராக ஹெச்.ராஜாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு அவா் ஆஜராகாததால் நடுவா் எண் 2 (அரசியல்வாதிகளுக்கான) சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரம்வீா், ஹெச்.ராஜாவுக்கு பிடியாணை பிறப்பித்து அக்.27ஆம் தேதி உத்தரவிட்டாா். இந்த நிலையில் ஹெச்.ராஜா ஸ்ரீவில்லிபுத்தூா் நடுவா் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் பெரிய பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது