
தஞ்சாவூரில் திங்கட்கிழமை பிற்பகல் திறக்கப்பட்ட உணவு அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையிலுள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் நாட்டிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் திங்கள்கிழமை பிற்பகல் திறக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தை மும்பையிலிருந்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
ஏறத்தாழ 1,860 சதுர அடி பரப்பளவில் ரூ.1.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை இந்திய உணவு கழகமும், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பழங்கால தானியச் சேமிப்பு முறைகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டு சேமிப்பில் உள்ள சவால்கள், உணவு தானிய உற்பத்தி சூழ்நிலைகளை விளக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
நாடோடி வேட்டைக்காரர்களைக் குடியேறிய விவசாய உற்பத்தியாளர்களாக மாற்றிய பரிணாம செயல்முறைகள் இந்த அருங்காட்சியகத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாய நிலத்திலிருந்து மக்களின் தட்டுக்கு உணவு தானியங்களின் பயணம் பற்றிய தகவல்களின் உள்ளடக்கத்தை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் அருங்காட்சியத்தில் பார்வையிட வரும் அனைவருக்கும் நுழைவு கட்டணம் இலவசம்.
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல செயல் இயக்குநர் தல்ஜித் சிங், தலைமைப் பொது மேலாளர் சஞ்சீவ் குமார் கௌதம், பொது மேலாளர் பி.என். சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.