
பருவத்தேர்வுகள் எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும்: அண்ணா பல்கலை
சென்னை: பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வுகள் எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த பருவத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தவும், பருவத்தேர்வை எழுத்துத் தேர்வாக நடத்திக் கொள்ளவும், தனியார் பொறியியல் கல்லூரிகள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பருவத் தேர்வுகள் அனைத்தும் எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்றும், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் எழுத்துத் தேர்வு நடத்துவதே உகந்தது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வெகு நாள்களுக்கு எழுத்துத் தேர்வு ஒத்திவைத்துக் கொண்டே இருக்க முடியாது, இது மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும். கல்லூரிகளைத் திறந்து வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் போது, எழுத்துத் தேர்வு முறையை தொடங்க இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களோ, இந்த டிசம்பர் பருவத் தேர்வுக்குப் பிறகு, கல்லூரிகளில் பல எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவது உறுதி செய்யப்படும். ஆனால், இந்த டிசம்பர் மாத பருவத் தேர்வுக்கு அவ்வளவு நேரம் இல்லை.
மேலும், கரோனா மூன்றாம் அலை அச்சம் மற்றும் கனமழை தொடரும் நிலையில், கல்லூரிகளில் எழுத்துத் தேர்வு நடத்துவது தற்போதைக்கு மிகவும் சிக்கலானது. அது மட்டுமல்ல, பல கல்லூரிகளில் பருவத் தேர்வுகளை, போதுமான சமூக இடைவெளியுடன் நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பே இல்லை என்றும் கூறுகின்றன.
மேலும், பிஆர்க் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளுக்குத் தேர்வானவர்கள், இன்று முதல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று தங்களது சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.