Enable Javscript for better performance
மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்- Dinamani

சுடச்சுட

  மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

  By DIN  |   Published on : 15th November 2021 01:57 PM  |   அ+அ அ-   |    |  

  mkstalin1

  மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

   

  மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாக திமுக அரசு திகழும் என்ற உறுதியினை வழங்குகிறேன். எந்நாளும் மக்களுடனேயே  இருப்போம்; மாநிலத்தைக் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

  இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தைப் பெருக்குவதில் ஆண்டுதோறும் பொழிகின்ற வடகிழக்குப் பருவமழைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த ஆண்டு அதன் பங்கு மிக அதிகமாகி உபரியாகிவிட்டது. வழக்கத்தைவிட அதிகமான அளவில் வடகிழக்குப் பருவமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

  பருவமழை தொடங்குவதற்கு முன்பே, வடிகால்களைச் சீரமைக்கும் பணிகளை அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டது. 

  நவம்பர் 6-ஆம் நாள் இரவில் விடிய விடிய சென்னையில் மழை பெய்த நிலையில், உங்களில் ஒருவனான நான், நவம்பர் 7-ஆம் நாள் காலை முதல் மாலை வரை பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன், மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய உதவிகளைச் செய்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டேன். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திடும்  பணியையும், மக்களைச் சந்திக்கும் அடிப்படைக் கடமையையும் ஒவ்வொரு நாளும் மேற்கொண்டேன்.

  அமைச்சர்கள், அதிகாரிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் மழை - வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மிகுந்த பொறுப்புடன் மேற்கொண்டதை நன்றிப் பெருக்குடன் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளேன்.

  அரசு இயந்திரம் 24X7 நேரமும் இடைவெளியின்றி இயங்கும் வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ள் தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாகக்  கேட்டறிந்து, அவை உடனுக்குடன்  நிறைவேற்றப்பட்டன.

  செயல்பாபு என நான் அழைக்கும் அமைச்சர் சேகர்பாபு, மாசற்ற மக்கள் பணியாளரான அமைச்சர் மா.சு. ஆகியோர் சென்னை நகரை வெள்ள பாதிப்பின்றி காப்பதில், கண்ணை இமை காப்பது போல், பெரும் பங்காற்றினர்.

  தலைநகர் சென்னை போலவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களும் பெருமழையால் பாதிக்கப்பட்டிருந்ததால், நவம்பர் 12-ஆம் நாளன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேரில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன்; பாதிக்கப்பட்ட நம் மக்களைச் சந்தித்தேன். வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும். அவற்றில் வெள்ளம் ஏற்படாதவாறு பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். இரண்டுமே அரசின் பணிதான் - கடமைதான் என்பதை உணர்ந்து இரண்டு மாவட்டங்களிலும் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுத்திட களத்திலிருந்தவாறே உத்தரவிட்டேன்.

  சென்னையிலும், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் சென்றபோது, பொதுமக்கள் நேரில் வந்து தமது தேவைகளையும் குறைகளையும்  தெரிவித்தனர். அவர்கள் காட்டிய ஆழ்ந்த அக்கறையும் ஒத்துழைப்பும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு உதவிகரமாக இருந்தன. 

  எப்போதுமே இயற்கைச் சூழலின் சாதக - பாதகங்களுடன் இணைந்து வாழ்ந்து வரும் இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு வண்டலூர் பகுதியில் பட்டா வழங்கி மனநிறைவு கொண்டேன். பாதிப்புக்கு ஆளான பொதுமக்கள் பலருக்கும்  நிவாரணப் பொருட்களை வழங்கிடும் வாய்ப்பு அமைந்தது. தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும் கேட்டறிந்தேன்.

  மாநிலம் முழுவதும் பெய்த பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் தாளடி - சம்பா பருவ நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன என்ற செய்தி கிடைத்த வேகத்தில், உடனடியாக உழவர் பெருமக்களின் துயர் துடைக்கவும், மக்களின் நலன் காக்கவும் 7 அமைச்சர்கள் கொண்ட குழுவினை அமைத்து உடனடியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

   கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில்,  தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன்,  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள நிலவரங்களை உடனுக்குடன் தெரிவித்தனர். அந்த விவரங்களைக் கேட்டதும், நேரடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் பணிக்கு ஆயத்தமானேன்.

  நவம்பர் 12-ஆம் நாள் இரவு புதுச்சேரிக்கு செல்லும் வழியில் கழகத்தினரையும் பொதுமக்களையும் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிந்தேன். நவம்பர் 13-ஆம் நாள் காலையில் கடலூர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன். ஆடுர்அகரம் என்ற இடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், வெள்ளபாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆவன செய்தேன்.

  குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரங்கமங்கலம் ஊராட்சி மாருதி நகரில் பாதிக்கப்பட்டோரிடம் நலன் விசாரித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினேன்.  வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினேன். கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்த மக்களைச் சந்தித்து, அவற்றைப் பெற்றுக் கொண்டேன்.

  கடலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் புத்தூர் கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ததுடன், நெல் விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டறியும் வாய்ப்பு அமைந்தது. நாகை மாவட்டம் கருங்கண்ணி என்ற இடத்தில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தபோது, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உழவர் பெருமக்கள் நேரில் தெரிவித்தனர். அருந்தவம்புலம் என்ற இடத்தில் பாதிப்புகளைப் பார்வையிட்டதுடன், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. அன்றைய நாளில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்திருந்ததால், பயண வழியில் இருந்த மருத்துவ முகாமுக்கும் நேரில் சென்று, அங்கு நடைபெற்ற மருத்துவப் பணிகளைப் பார்வையிடவும் அங்கிருந்த மக்களிடம் மழைக்கால உடல்நலப் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு அமைந்தது.

  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து கவனத்துடன் ஆய்வுகளை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட இராயநல்லூர், புழுதிக்குடி ஆகிய இடங்களில் பாதிப்புக்குள்ளாகியிருந்த உழவர்களை சந்தித்து உரையாடினேன். நெற்பயிர் மட்டுமின்றி, கால்நடைகளும் பாதிக்கப்பட்டிருப்பதையும், மண்சுவர் வீடுகளைக் கொண்ட குடிசைகள் சேதமடைந்திருப்பதையும், பயிர்க் காப்பீட்டின் மூலமாக நிவாரணத் தொகை பெறுவதில் உள்ள சிக்கல்களையும் உழவர்கள் தெரிவித்தனர்.

   அமைச்சர் கே.என்.நேரு,  அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான குழுவில் உள்ள அமைச்சர்கள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்து, முழுமையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டனர். நவம்பர் 13 மாலையில் தஞ்சை மாவட்டம் பெரியக்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட்டேன்.

  டெல்டா மாவட்டங்களின் நெல் விளைச்சலுக்கு மிகப் பெரும் நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை தனது முழுக்  கொள்ளளவை ஏறத்தாழ எட்டியுள்ள நிலையில், கனமழையிலும் அதிக அளவிலான வெள்ளபாதிப்பு ஏற்படாததற்குக் காரணம், திமுக அரசு பொறுப்பேற்றவுடனேயே, மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறக்கச் செய்ததுடன், அதன்  தண்ணீர் டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை செல்லும் வகையில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4000 கிலோ மீட்டர் அளவுக்கு ஆறுகள் - கால்வாய்கள் - வாய்க்கால்கள் ஆகியவை முறையாகத் தூர் வாரப்பட்டதுதான். இதனை உழவர் பெருங்குடி மக்களும் நேரில் என்னிடம் தெரிவித்ததுடன், தற்போதைய மழையில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களால் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்தும் தெரிவித்தனர்.

  நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 17 இலட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நவம்பர் 13-ஆம் நாள் வரையிலான பாதிப்பு 68 ஆயிரத்து 652 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களாகும். இவற்றுக்கான காப்பீடு, இழப்பீடு ஆகியவை கிடைக்கச் செய்வதுடன், அறுவடை செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் பாதிக்காத வகையிலும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கனமழை காலத்தை உணர்ந்து ஈரப்பத அளவை நிர்ணயிப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய பணிகளாகும். அது குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  டெல்டா மாவட்ட மழை - வெள்ள சேதங்களைப் பார்வையிடச் சென்றபோது உழவர்களும் பொதுமக்களும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து ஆர்வத்துடனும் பாசத்துடனும் என்னை அணுகியதை - உரிமையுடன் கோரிக்கைகளை வழங்கியதை மறக்க முடியாது. தமிழ்நாடு முழுமைக்கும் முதலமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் உங்களில் ஒருவனான என்னை டெல்டா மாவட்ட மக்கள், தங்கள் மண்ணின் மைந்தனாகக் கருதி, மிகுந்த அன்பு காட்டி உரையாடியது நெஞ்சத்திற்கு இதமாகவும் ஆறுதலாகவும்  இருந்தது. டெல்டா பகுதி மக்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 13 இலட்சம் ரூபாய்க்கும் மேல் என்னிடம் வழங்கினர். மாநிலம் முழுவதுமே இந்தப் பேரன்பை மக்களிடம் காண்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வையும் அவர்களுக்காக அவர்தம் மேன்மைக்காக மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் பெறுகிறேன்.

  தமிழ்நாட்டின் தெற்கு எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகளை மிகுந்த  கவலையுடன் கவனித்த நிலையில், அங்கும் நேரடிப் பயணத்தை மேற்கொள்கிறேன். ஏற்கனவே  அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் அங்கே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,  குமரி மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் கரமாக உங்களில் ஒருவனான எனது கரம் இருக்கும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.

  ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும், மழை நீர் தேங்காத வகையில் கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் நலன் காக்கும் இந்த அரசு உறுதி எடுத்துள்ளது. அதற்கேற்ற வகையில் உள்ளாட்சி நிர்வாகம் முடுக்கிவிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் கடும் நெருக்கடியை சந்திக்கும் சென்னையில் மழை நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் நமது அரசு வெளியிட்டுள்ளது.

  அதுபோலவே, தமிழ்நாடு முழுவதும் தொலைநோக்குப் பார்வையுடனான மழைநீர் வடிகால் கட்டமைப்பை  உருவாக்கி, நீர் ஆதாரங்களைப் பெருக்குவதே நமது அரசின் தலையாய நோக்கமாகும். ஒவ்வொரு திட்டத்திலும் முந்தைய அ.தி.மு.க ஆட்சியாளர்கள் நடத்திய  ஊழல்கள் களையப்படுவதுடன், அவர்களின் மலின அரசியல் நோக்கத்திலான - பொதுகவனத்தை திசை திருப்பும் எண்ணத்துடன் வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளி, மக்களுக்கான பணியில் நமது அரசு தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும்.

  இது எனது தலைமையிலான அரசு என்பதைவிட, நமது அரசு என்று குறிப்பிடுவதையே எப்போதும் விரும்புகிறேன். இது உங்களால், விரும்பி என்னிடம் வழங்கப்பட்ட ஆட்சியுரிமை. அதனை நொடிப்பொழுதும் மறந்திடாமல், மக்கள் பணியாற்றுவது ஒன்றே நமது அரசின் இலக்காகும். பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது  அரசின் தலையாய  கடமை. மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாக திமுக அரசு திகழும் என்ற உறுதியினை வழங்குகிறேன். எந்நாளும் மக்களுடனேயே  இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்!
   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp