கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் மீண்டும் பெய்த தொடர் மழையால் கோணக்கடுங்கலாறு கரை உடைந்து ஏறத்தாழ 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.
ஐம்பதுமேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களை எடுத்துக் காட்டும் விவசாயிகள்.
ஐம்பதுமேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களை எடுத்துக் காட்டும் விவசாயிகள்.


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் மீண்டும் பெய்த தொடர் மழையால் கோணக்கடுங்கலாறு கரை உடைந்து ஏறத்தாழ 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.

மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 17,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை குறைந்ததைத்தொடர்ந்து, வயலில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. என்றாலும் வடிகால் பிரச்னையாலும், அவ்வப்போது மழை பெய்வதாலும் 9,245 ஏக்கரில் தேங்கிய தண்ணீர் வடிவதில் தாமதமாகிறது. இப்பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் அருகே ஐம்பது மேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.
தஞ்சாவூர் அருகே ஐம்பது மேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.

இந்நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மீண்டும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களிலும் பலத்த மழை பெய்ததால், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா பருவ இளம் பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல, திருவையாறு வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் தஞ்சாவூர் அருகே வரகூர் - ஐம்பதுமேல் நகரம் இடையே கோணக்கடுங்கலாறில் தென்கரையில் சுமார் 20 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது.

தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட காரணமாக இருந்த செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன விவசாயிகள்.
தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட காரணமாக இருந்த செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன விவசாயிகள்.

இதனால், ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, வரகூர், நடுக்காவேரி, அந்தலி, குழிமாத்தூர் ஆகிய கிராமங்களில் ஏறத்தாழ 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இதில், அண்மையில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வெண்ணாற்றில் அகரப்பேட்டையில் பிரியும் கோணக்கடுங்கலாறு நாகத்தி கிராமத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. இதன் மூலம் ஏறக்குறைய 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், அம்பதுமேல் நகரம் - அந்தலி கிராமங்களை இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக தரைப்பாலம் மூடப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைப்பட்டு வரகூர் - ஐம்பது மேல் நகரம் இடையே உடைப்பு ஏற்பட்டு, சம்பா பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என விவசாயிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் சுமார் 50 விவசாயிகள் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்தது:
சம்பா பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீடு பாதி பேர் செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் அருகே ஐம்பது மேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.
தஞ்சாவூர் அருகே ஐம்பது மேல் நகரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்.

ஒவ்வொரு முறையும் தரைப்பாலத்தில் ஏற்படும் அடைப்பால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இத்தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com