மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நீர் வடியாததால் விளை நிலங்களில் அழுகும் நெற்பயிர்கள் 

தொடர் மழையால் விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ள நிலையைக் கண்டு  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
மானாமதுரை ஒன்றியம் சன்னதி புதுக்குளம் கிராமத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற் பயிர்களை மூழ்கடித்துள்ள மழைத்தண்ணீர்.
மானாமதுரை ஒன்றியம் சன்னதி புதுக்குளம் கிராமத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து நெற் பயிர்களை மூழ்கடித்துள்ள மழைத்தண்ணீர்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் தொடர் மழையால் விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ள நிலையைக் கண்டு  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடி ஒன்றியங்களில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கடந்த சில நாள்களாக இரவு பகலாக கொட்டித் தீர்த்த மழையால் வறண்டு கிடந்த பாசன கண்மாய்கள் நிரம்பின. மேலும் வைகை ஆற்றில் வந்த மழைத் தண்ணீரும் வைகை அணையின் உபரி தண்ணீரும் பாசன கண்மாய்களுக்கு போய்ச் சேர்ந்ததால் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சமீபத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 

மானாமதுரை ஒன்றியத்தில் செய்களத்தூர், சன்னதி புதுக்குளம், கட்டிக்குளம் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக மழை ஓய்ந்தும் விளைநிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. 

இதனால் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகிவரும் நிலையைக்கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து செய்களத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில் கடன் வாங்கி இந்த ஆண்டு நெற்பயிர்  நடவு செய்தேன். நடவு செய்த சில நாட்களிலேயே இடைவிடாது பெய்த மழையாலும் கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீராலும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

தற்போது வரை தண்ணீரை விளைநிலங்களிலிருந்து வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகத் தொடங்கிவிட்டன. இன்னும் ஒருசில நாட்களில் விளை நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றாவிட்டால் நெற்பயிர்கள் முழுமையாக அழுகிவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com