இனி வாரம் இருமுறை கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இனி வரும் வாரங்களில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இனி வரும் வாரங்களில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
 கரோனா தடுப்பூசி மருந்தே பெருந் தொற்றுக்கு எதிரான முதன்மைக் கேடயம் என்பதை கருத்தில்கொண்டு தகுதி வாய்ந்த அனைவருக்கும் அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே வாரம்தோறும் ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
 மேலும், இதர நாட்களிலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக இனி இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த அரசு உத்தேசித்துள்ளது.
 இதுவரை கரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களிலும், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும்.
 திங்கள்கிழமை தவிர இதர நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும். இந்த சிறப்பு முகாம்கள் குறித்து ஊடகங்கள், ஆட்டோக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com