செய்யாறு ஆற்றுப்பகுதி வெள்ளநீரில் மின் பாதையை சீரமைத்த மின் ஊழியர்கள்: 25 கிராம மக்கள் பாராட்டு

செய்யாறு ஆற்றுப்பகுதியில் செல்லும் வெள்ள நீரில்,  மின் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து மின் பாதையை சீரமைத்து மின்சாரம் வழங்கியுள்ளனர்.
தண்டரை  - எரையூர் இடையே செய்யாறு ஆற்றில் பெருக்கெடுத்தும் ஒடும் வெள்ள நீரில் மின்சாரப் பாதையை சீரமைக்கும் மின் ஊழியர்கள்.
தண்டரை  - எரையூர் இடையே செய்யாறு ஆற்றில் பெருக்கெடுத்தும் ஒடும் வெள்ள நீரில் மின்சாரப் பாதையை சீரமைக்கும் மின் ஊழியர்கள்.

செய்யாறு: செய்யாறு ஆற்றுப்பகுதியில் செல்லும் வெள்ள நீரில்,  மின் ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து மின் பாதையை சீரமைத்து மின்சாரம் வழங்கியுள்ளனர்.

கொட்டும் மழையிலும் மின்சாரம் வழங்கிய  மின்  ஊழியர்களுக்கு 25 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுங்கட்டூர்  பகுதியில் 110 கே.வி. துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து திருவத்திபுரம், பெரும்பள்ளம், மதுரை உள்ளிட்ட  பல பகுதிகளில்  உள்ள  33 கே.வி.மின் நிலையங்களுக்கு உயர் அழுத்த மும்முனை மின்சாரம் செல்லும் மின்கம்பி மூலம் மெயின் லைன்கள் செல்கின்றன. 

சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் இருந்து மதுரை மின் நிலையத்திற்கு தண்டரை, எறையூர்  கிராமம் வழியாக  செய்யாறு ஆற்றுப்பகுதியில் மின் கம்பி தடம்  அமைக்கப்பட்டுள்ளது.

தண்டரை அணைக்கட்டு கால்வாயில் இருந்து  செல்லும் வெள்ள நீர் செய்யாறு ஆற்றுப் பகுதி வழியாக செல்வதால்  ஆற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட மின் பாதை செல்லும் மின் கம்பங்கள்  நவ.15 ம் தேதி நள்ளிரவில் அடியோடு சாய்ந்தன. அதனால் மும்முனைப் பாதையில் செல்லும்  2 மெயின் லைன் கம்பிகள் துண்டிக்கப்பட்டன.

தகவலறிந்த மின்  துறையினர்  விரைந்து வந்து உடனடியாக அந்தப் பகுதியில் செல்லும் மின் இணைப்பைத் துண்டித்தனர். அதன் காரணமாக மதுரை மின் நிலையப் பகுதியைச் சேர்ந்த  25 கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபட்டுப் போனது. 

நவ.16 -ம் தேதி மின் ஊழியர்கள் மின் பாதையை சரி செய்ய முயற்சித்த போது ஆள் உயரத்திற்கு செல்லும் வெள்ள நீரில் உயர் அழுத்த மின் கம்பிகளை எடுக்க முடியாமல் திணறினர். பின்னர், செய்யாறு தீயணைப்புப் படை வீரர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.

இதனை  அறிந்த செய்யாறு தொகுதி  எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உயர் அழுத்த மின் பாதையை சரி செய்யும் பணியினை பார்வையிட்டு பின்னர்  மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனை வழங்கினார். 

அதன் பேரில் உதவி மின் பொறியாளர்கள் தெய்வசிகாமணி, நாகராஜன், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், திலீப்குமார், பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் புதன்கிழமை (நவ.17) 30 மின் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன், டிராக்டர், ஜேசிபி, கிரேன் போன்ற உபகரணங்கள் மூலம் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீரில் உயிரை பணையம் வைத்து விடா முயற்சியாக புதியதாக மின் பாதையை அமைத்து மும்முனை உயர் அழுத்த  மின்சாரத்தை  25 கிராமங்களுக்கு விநியோகித்தனர். 

போர்க்கால அடிப்படையில் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி வேலை பார்த்ததை நேரில்  பார்த்த நாவல், மதுரை, தாண்டுகுளம், பாராசூர், வாக்கடை, கழனிப்பாக்கம், தொழுப்பேடு, முக்கூர், கொருக்கை உள்ளிட்ட 25 கிராம மக்கள் மின் ஊழியர்களை வெகுவாக பாராட்டி உள்ளனர். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com