சென்னை, 3 மாவட்டங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, 3 மாவட்டங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை அதி பலத்த மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை, தெற்கு ஆந்திரம் -  வட தமிழக கடற்கரை பகுதியில் நிலவக்கூடும்.  இதன் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழை பெய்யக் கூடும். இவை தவிர, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை , நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் வியாழக்கிழமையும், தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் வெள்ளிக்கிழமையும், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே, குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com