தமிழகத்தின் தியாக தீபங்கள் - 94: ஆர்.வீ.சுவாமிநாதன்

சிவகங்கை மாவட்டம், பாகநேரியில் 5-8-1908-இல் பிறந்தவர் ஆர்.வீ.சுவாமிநாதன்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 94: ஆர்.வீ.சுவாமிநாதன்


சிவகங்கை மாவட்டம், பாகநேரியில் 5-8-1908-இல் பிறந்தவர் ஆர்.வீ.சுவாமிநாதன்.

1929-இல் திருமங்கலத்தில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

1930 உப்பு சத்தியாகிரகம், 1932 ஒத்துழையாமை இயக்கம், 1940 தனிநபர் சத்தியாகிரகம், 1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றுச் சிறை சென்றவர். காவல் துறையின் தாக்குதலுக்கு ஆளானவர்.

விவசாயிகளின் நலன்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸின் துணை அமைப்பான "கிஸான் சபா'வின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக 1934-இல் பொறுப்பேற்றார். 1939-இல் இதன் இணைச் செயலாளரானார். 1934-இல் காந்தியடிகளின் தமிழகப் பயணத்தின்போது பாகநேரிக்கு அவரை அழைத்துச் சென்றதோடு தனது இல்லத்தில் தங்க வைத்து ரூ. 4,000 நன்கொடையும் அளித்தார்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, பலத்த எதிர்ப்புகளுக்கிடையே பல கோயில்களில் ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்வித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் ஜில்லா போர்டு துணைத் தலைவராக 1939 முதல் 1949 வரை பதவி வகித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து அவர்களை ஒன்றிணைத்ததோடு கிராமங்களில் தேசியச் சிந்தனையும் விடுதலை உணர்வும் வேர்விட இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார்.

சிவகங்கை தாலுகாவில் உடையப்பா தலைமையில் செயல்பட்ட ஜமீன் இனாம் விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக விளங்கினார். 1948-இல் "ஜமீன் இனாம் ஒழிப்புச் சட்டம்' இயற்றப்பட சட்டப்பேரவைக்கு உள்ளும், வெளியும் போராடினார்.

1946 முதல் 1967 வரை மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக விளங்கியுள்ளார். ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு வழிவகை செய்த குற்றப் பரம்பரைச் சட்டத்தை முறியடிக்கப் போராடினார்.

1930-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 1934-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். தாலுகா, மாவட்டம் என பல நிலைகளில் காங்கிரஸின் தலைவராக விளங்கிய ஆர்வீஎஸ் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.

சோவியத் புரட்சியின் தாக்கம், சோஷலிச கருத்துகளுக்கு ஏற்பட்ட செல்வாக்கு ஆகியவை இந்தியாவில் பிரதிபலித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே "காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி' உருவாயிற்று. அதில் இணைந்து செயல்பட்டார்.

விடுதலைக்குப் பின்பு ஸ்வீடன், நியூஸிலாந்து, கனடா, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற அகில உலக விவசாயிகள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். வேறு பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளின் விவசாயம், மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டறிந்துள்ளார். பல்லாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

1971 முதல் 1984 வரை மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1980-லிருந்து மூன்று ஆண்டுகள் மத்திய விவசாயத் துறை இணை அமைச்சராக இருந்தார். கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் விடுதலைப் போராட்ட உணர்வுக்கு ஆற்றுப்படுத்திய ஆர்வீஎஸ் 4-10-1984-இல் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com