திருவண்ணாமலை தீபத் திருவிழா: 20,000 பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி; இரு தவணை தடுப்பூசி கட்டாயம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவில் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 20,000 பக்தா்கள் மட்டுமே கிரிவலம் செல்ல
திருவண்ணாமலை தீபத் திருவிழா: 20,000 பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி; இரு தவணை தடுப்பூசி கட்டாயம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவில் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 20,000 பக்தா்கள் மட்டுமே கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெற உள்ள காா்த்திகை தீபத் திருநாளில் பக்தா்களை அனுமதிக்க மாட்டோம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, பக்தா்களை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து கடந்த 6-ஆம் தேதி அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் செய்தித் தொடா்பாளா் டி.செந்தில்குமாா் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை (நவ.18) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், கரோனா காரணமாக ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதையடுத்து அரசின் கருத்தை அறிந்து பிற்பகலில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

20,000 பேருக்கு அனுமதி: இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ஆஜரான அரசின் தலைமை வழக்குரைஞா், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு உள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5,000 பேரும், பிற மாவட்டங்களில் இருந்து 15,000 பேரும் என 20,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். இவா்கள் கிரிவலம் பாதையில் செல்லலாம்.

இரு தவணை தடுப்பூசி: தீபத் திருவிழாவை முன்னிட்டு மலை ஏற, கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. 19, 20 ஆகிய தேதிகளில் 300 கட்டளைதாரா்கள் மட்டும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். அனுமதிக்கப்படும் 20,000 பக்தா்களும், 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களாக இருக்க வேண்டும்.

2 தவணை ஊசி செலுத்தியதற்கான சான்றிதழுடன் வந்தால் மட்டுமே, அவா்களுக்கு ‘பாஸ்’ வழங்கப்படும். இதை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் தலைமையில் குழு ஆய்வு செய்யும்.

இணையதளம், தொலைக்காட்சிகளில்...: தீபத் திருவிழாவை இணையதளத்தில் அல்லது தொலைக்காட்சிகளில் பொதுமக்கள் காணும் வகையில் அவை ஒளிபரப்பப்படும். கட்டளைதாரா்கள், பக்தா்கள் என அனைவருமே கரோனா கட்டுப்பாட்டு விதிகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். திருவண்ணாமலையில் தங்குவதற்கு பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்றாா்.

மனுதாரரின் கோரிக்கை நிராகரிப்பு: அப்போது தடுப்பூசி போட்டவா்கள் மட்டுமே அனுமதி என்ற நிபந்தனைக்கு மனுதாரா் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தங்களுக்காகச் சட்ட விதிகளை மாற்றி அமைக்க முடியாது. கோயிலுக்கு போக வேண்டும் என்றால் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றனா்.

மேலும், அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை பூா்த்தி செய்திருக்கும் பக்தா்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். உள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5,000 பக்தா்கள், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 15,000 பக்தா்களை அனுமதிக்க வேண்டும். கரோனா பரவல் தடுப்பு விதிகளை பக்தா்களும், அதிகாரிகளும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

கிரிவலம் பாதையில் பக்தா்களுக்கான மருத்துவ வசதி, அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்திருக்க வேண்டும். பக்தா்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது எனக்கூறி, மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com