அவிநாசி அருகே வீட்டுமனை பட்டா கேட்டு 2-வது நாளாக குடிசை அமைத்து தொடர் போராட்டம்

அவிநாசி அருகே தெக்கலூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் குடிசை அமைத்து 2 ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெக்கலூர் கருவேலங்காடு பகுதியில் குடிசைகள் அமைத்து இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
தெக்கலூர் கருவேலங்காடு பகுதியில் குடிசைகள் அமைத்து இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.

அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் குடிசை அமைத்து 2 ஆவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், தெக்கலூர் அய்யன் கோயில் கருவேலங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மக்கள் இலவச  வீட்டுமனை பட்ட கேட்டு, குடிசை அமைத்து வெள்ளிக்கிழமை முதல் விடிய,விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருவேலங்காடு பகுதியில் குடிசைகள் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: தெக்கலூர் காமநாயக்கன்பாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பல தலைமுறைகள் கடந்த நிலையில், ஒரே இடத்தில் நான்கு குடும்பங்களாக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருகிறோம். இதனால் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, தற்பொழுது தெக்கலூர் அருகே அய்யன் கோயில் பின்புறம் அரசு நிலத்தில் குடிசை அமைத்துள்ளோம் என்றனர். இதற்கும் வருவாய்த்துறையினர், இந்த இடம் வண்டிபாதை அல்லது குட்டை புறம்போக்கு என்று வருவாய் பதிவேட்டில் உள்ளதாக கூறுகின்றனர். 

மேலும் குடிசை அமைத்த மக்களுக்கு வேறு இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாத காரணத்தால், இதே இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

இரண்டாவது நாளாக கருவேலங்காடு பகுதியில் மக்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com