வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்கு மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருது

மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருதினை வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பெற்றுள்ளது.
விருதினை மத்திய அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்க்கா சங்கர் மிஸ்ரா வழங்க , முந்தைய செயல் அலுவலர் கு.குகன், தற்போதைய செயல் அலுவலர் ஜெ. பிரகாஷ் இருவரும் பெற்றுக் கொண்டனர்.
விருதினை மத்திய அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்க்கா சங்கர் மிஸ்ரா வழங்க , முந்தைய செயல் அலுவலர் கு.குகன், தற்போதைய செயல் அலுவலர் ஜெ. பிரகாஷ் இருவரும் பெற்றுக் கொண்டனர்.

மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருதினை வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் தூய்மையான நகரங்களில் முதலிடம், தென்னிந்திய அளவில் இரண்டாமிடம்  பிடித்து சாதனை படைத்துள்ளது.

புது தில்லியில்  இன்று மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்டம்  வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்கு தென்னிந்தியாவின் சிறந்த தன் திறன் செயல்பாட்டு நகரம் விருது வழங்கப்பட்டுள்ளது.

கோயில் நகரம் வைத்தீஸ்வரன்கோயில் தூய்மையான நகரமானது
மயிலாடுதுறை மாவட்டத்தில்  சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் நகரில் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான  புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி திருக்கோயில்  உள்ளது. இது  நவக்கிரகங்களில்  செவ்வாய் தலமாக விளங்குகிறது . மேலும்  இந்தக் கோயிலுக்கு செல்வமுத்துக்குமரசாமி  மற்றும் தன்வந்திரி சித்தர் பீடத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  நாள்தோறும் வந்து செல்கின்றனர். நாடி ஜோதிடத்திற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரம். வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகிலிருந்து நாடி ஜோதிடம் பார்க்க வருகின்றனர்.  தற்போது  தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக உருவெடுத்து, தென்னிந்தியாவின் சிறந்த தன் திறன் செயல்பாட்டு நகரத்துக்கான விருதுபெற்று புகழ் சேர்த்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு

மத்திய அரசு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நகரங்களுகிடையே 2006-ஆம் ஆண்டு முதல்  ஆண்டுதோறும்  ஸ்வச் சர்வேக்சன் என்னும் தூய்மை நகர போட்டி நடத்தி பல்வேறு விருதுகள் வழங்கி நகரங்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அது போல சிறப்பாக செயல்படும் மாநில அரசுக்கும் விருது வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் ஜூலை 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலத்தில்  இந்திய நகரங்களில்  தூய்மை நகரமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நேரடி  ஆய்வு செய்து அந்த நகர மக்களின் கருத்துகள் பெறப்பட்டு, தரவரிசை பட்டியல்  தயாரிக்கப்பட்டது.

தூய்மை நகரங்கள் போட்டி முடிவுகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டு பாராட்டு

புது தில்லி விஞான்  பவனில் இன்று நடைபெற்ற ஸ்வச் அம்ருத் மகோத்சவ் விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த்,  தூய்மையான நகரங்கள் ஆறாவது ஆண்டின் போட்டி முடிவுகளை வெளியிட்டு  வெற்றி பெற்ற நகரங்களைப் பாராட்டி உரையாற்றினார். மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி மற்றும் இணை அமைச்சர் கௌசல் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

குடியரசுத்தலைவர் அறிவித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், இந்திய நகரங்களில் மக்கள் தொகை  25,000  எண்ணிக்கைக்கு குறைவான நகரங்கள் பிரிவில் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி தமிழ்நாடு அளவில் முதல் இடமும் தென்னிந்தியா அளவில் இரண்டாம்  இடமும் பிடித்து அசத்தி உள்ளது.

தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்கு தென்னிந்தியாவின் சிறந்த தன் தனித்திறன் செயல்பாட்டு நகரம் விருதினை மத்திய அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்க்கா சங்கர் மிஸ்ரா வழங்க  தூய்மை போட்டி நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய முந்தைய செயல் அலுவலர் கு.குகன் மற்றும் தற்போதைய செயல் அலுவலர் ஜெ. பிரகாஷ் இருவரும் விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

தூய்மை நகர கணக்கெடுப்பு காலத்தில் பணி புரிந்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின்  முன்னாள்  செயல்அலுவலர் கு.குகன் பணிக்காலத்தில் பணியாளர்கள் உழைப்பு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையான நகரமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கு.குகன் பணிக்காலத்தில் கூடுதலான பணியாளர்களை சேர்த்து, அவர்களுக்கு ஊக்கமளித்து, நகர் முழுக்க தூய்மை செய்யப்பட்டதுடன் இயற்கை உரம் தயாரித்தல் , குப்பையில் வரும் தேங்காய் ஓடுகளில் மருந்து தயாரித்தல், பொது மக்கள் குப்பையில் ஆடைகள் வீசாமல் இருக்க பழைய துணிகளை  சேகரித்து அனாதை இல்லங்களுக்கு அனுப்புதல், வீட்டில் உரம் தயாரிக்க விழிப்புணர்வு, மாடித் தோட்டப்போட்டிகள், குப்பைகளை தரம்பிரித்து வரும் வருமானத்தில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களின்  தூய்மை குறித்த புகார்களை வாட்ஸப் மூலம் பெற்று  தீர்த்து வைத்தல் என பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தார். 

இவர் இதற்கு முன் பணிபுரிந்த நகரத்திலும் இரண்டு  முறை தேசிய  விருது பெற்றுள்ளார் என்பதும் தற்போது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டும் விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com