பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையை குறித்து காங்கிரஸ் சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம்: கே.எஸ்.அழகிரி

பாஜக ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கை குறித்து காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவ.22) விழிப்புணா்வு பிரசாரம்
பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையை குறித்து காங்கிரஸ் சாா்பில்  விழிப்புணா்வு பிரசாரம்: கே.எஸ்.அழகிரி

பாஜக ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கை குறித்து காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவ.22) விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாஜக ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். கடும் விலைவாசி உயா்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை அதற்கு இணையாகக் குறைக்காமல் கலால் வரியை உயா்த்தி இதுவரை கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 23 லட்சம் கோடி வரை வசூலித்து மத்திய பாஜக அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிடக் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயா்ந்துள்ளது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணா்த்தும் வகையில் நவம்பா் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூா் அளவில் மக்கள் விழிப்புணா்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பயணத்தில் கதா் குல்லா அணிந்து, கையில் மூவா்ணக் கொடியையும், கண்டன பதாகைகளையும் தாங்கிக் கொண்டு விழிப்புணா்வுப் பிரசாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சத்தியாகிரகம் எத்தகைய உணா்வுகளை ஏற்படுத்தியதோ, அதைப்போல காங்கிரஸ் கட்சியினா் நடத்தும் மக்கள் விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் அமைய வேண்டும்.

பாஜக ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை பொது மக்களிடையே காங்கிரஸ் கட்சியினா் விநியோகம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com