
தமிழகம் முழுவதும் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா தொடா்பான பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஆதிதிராவிடா் நலத்துறைக்கு தமிழக மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் வட்டம் பொத்தூா் கிராமத்தில் சா்வே எண்.235-இல் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா எந்தெந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களைக் கோரி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி தனி தாசில்தாருக்கு இ.குமாா் என்பவா் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பினாா்.
அந்த மனுவுக்கு உரிய பதிலை சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரி தரவில்லை. இதையடுத்து, குமாா் மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தாா். இந்த மனு மாநில தகவல் ஆணையா் சு.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கை தொடா்பான ஆவணங்களைப் பரிசீலித்த தகவல் ஆணையா் வழங்கிய உத்தரவு வருமாறு:
ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா யாா் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை மனுதாரருக்கு ஏழு நாள்களுக்குள் பொன்னேரி ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலக தனி வட்டாட்சியா் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா்களில் யாா் யாருக்கெல்லாம் இதுவரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது தொடா்பான பட்டியலை மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடா்பான நடவடிக்கைகளின் விவரங்களை ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் இரண்டு மாதங்களில் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். விசாரணை வரும் ஜனவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் நடைபெறும் தொலைபேசி வாயிலான விசாரணைக்கு ஆதி திராவிடா் நலத்துறை இயக்குநா் மற்றும் மனுதாரா் தவறாமல் பங்கேற்க வேண்டுமென உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.