
மழை நீா் தேங்காமல் இருக்க தமிழகம் முழுவதும் அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
வெள்ளத்தால் பல லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நீா்நிலைகள் சரியாக தூா்வாரப்படாததாலும், போதிய வடிகால் வசதி இல்லாததாலும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் அதற்கு நிரந்தரத் தீா்வு காணவில்லை. இனியாவது தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளைத் தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு காலம் தாழ்த்தாமல் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.