
கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ உடலுக்கு திருச்சி சரக டிஐஜி அஞ்சலி
திருச்சி: திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் (54). இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது ஆடு திருடர்களால் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் மற்றும் போலீஸார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உடல் வெளியே கொண்டு வருவதைக் கண்ட அவரது மகன் குகன்நாதன் கதறி அழுதார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம், அரசு வேலை வழங்கி உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி.
இரவு ரோந்து செல்லும் போலீஸார் தனியாக செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். திருடர்களை துரத்திச் சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் பின்னே சென்ற ஏட்டு, தனது வாகனத்தில் தாமதமாகச் சென்றதால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஒருவேளை இருவரும் ஒன்றாகச் சென்றிருந்தால் இச்சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
எஸ்.ஐ.யை கொலை செய்தவர்கள் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. அவர்களை பிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போலீஸார், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.