
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 97.5% உயிர்பாதுகாப்பு என்பது உறுதி என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (21-11-2021) சென்னை, திருவொற்றியூர் எண்ணூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற மெகா சிறப்பு கரோனாத் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி இன்று 10வது மெகா கரோனாத் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 லட்சம் பேருக்கு கரோனாத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுசுகாதாரத்துறையில் இருக்கிற விதிகளின் அடிப்படையில் பொது இடங்களில் வருவோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 சதவிகிதத்தினருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 38 சதவிகிதத்தினருக்கும் செலுத்தப்பட்டு, இந்திய சராசரியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவிகித தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4வது அலை, 5வது அலை என்று வந்தாலும் உயிரிழப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும்.
எனவே கோவாக்சின், கோவி-ஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 97.5 சதவிகிதம் உயிர் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக் மறைந்த பிறகு, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஒரு சிறு தயக்கம், சுணக்கம் இருந்தது. இவற்றையெல்லாம் மாற்றுகிற வகையில்தான் முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் 75 சதவிகிதம் என்கிற இலக்கை அடைந்திருக்கிறோம்.
இதையும் படிக்க- கேரளத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள்; என்ஐஏ விசாரணை கோரும் பாஜக
இப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்படிதான் பொது இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறோம். டெங்குவினால் 4 ஆயிரத்து 381 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 541 பேர் மட்டும்தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 2017ஆம் ஆண்டு 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி முகாம்களிலும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புகை மருந்து, அபேட் தெளித்தல், ஏ.டி.எஸ் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க லார்வாக்கள் நிலையிலேயே அழிப்பது, கம்பூசியா மீன்களை வளர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.