
ஏற்காடு மாநில அளவிலான பயிற்சி நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை உதவியாளா் முதல் உதவி பதிவாளா் பணியிடங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் அமைப்பதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்தது.
இதன்படி, ரூ. 61. 80 லட்சம் மதிப்பில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பில் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூா் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்காட்டில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, கொடைக்கானலில் அமைக்கப்படவுள்ள தேசிய அளவிலான பயிற்சி மையத்திற்குப் பதிலாக, ஏற்காடில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மாநில அளவிலான மையத்தின் பணிகளைத் தொடர அரசுக்கு உத்தரவிடக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுவரை ஏற்காட்டில் கட்டுமான பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட என்ன காரணம் என்பது தொடா்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், திட்டத்திற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்டுமானத்தின் நிலை என்ன, எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கையை அரசு இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றாா்.
அதைத்தொடா்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.செல்வேந்திரன், ஏற்காடு மாநில அளவிலான பயிற்சி நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. அதன்படி , ஏற்காட்டில் மாநில அளவிலான பயிற்சி நிலையம் அமைக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி கோரப்பட்ட அறிக்கை தயாராகி விட்டது. அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றாா். இதைப்பதிவு செய்த நீதிபதி, இவ்வழக்கின் விசாரணையை நவ.24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.