5 மண்டல தரவு மையங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வேயில் 314 ரயில்களின் எண்கள் மாற்றம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தரவு மேம்படுத்துதலுக்காக, நாட்டில் உள்ள 5 மண்டல தரவு மையங்களில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணிகள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தரவு மேம்படுத்துதலுக்காக, நாட்டில் உள்ள 5 மண்டல தரவு மையங்களில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணிகள் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, பயணச்சீட்டு முன்பதிவு சேவை சனிக்கிழமை இரவில் வழக்கம்போல தொடங்கியது.

சென்னை தரவு மையத்தில் 39 விடுமுறை மற்றும் பண்டிகை கால (தெற்கு ரயில்வேயில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்) ரயில்களின் கட்டணம் தத்கல் கட்டணத்தில் இருந்து சாதாரண கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர, தெற்கு ரயில்வேயில் இருந்து இயக்கப்படும் 314 ரயில்களின் எண்கள் மாற்றி, மறு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, நாடு முழுவதும் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தியபின்பு, மெயில், விரைவு சிறப்பு ரயில்கள் மற்றும் விடுமுறை, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில், சில ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னா், அடுத்தடுத்து முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு, முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதற்கிடையில், சிறப்பு ரயில் இயக்க நடைமுறையை ரத்து செய்து பழைய கட்டண முறையில் விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த வாரம் அமலுக்கு வந்தது. மேலும், பழைய கட்டண முறை மற்றும் ரயில் எண்கள் மாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தன. இதற்காக, நாட்டில் உள்ள 5 மண்டல தரவு மையங்களை சீரமைக்கும் பணிகள் நவம்பா் 14-ஆம் தேதி முதல் நவம்பா் 21-ஆம்தேதி நடைபெறும் என்றும், இதன் காரணமாக, நவம்பா் 14-ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பயணச்சீட்டு முன்பதிவு தரவு மேம்படுத்தும் பணிகள் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதையடுத்து, பயணச்சீட்டு முன்பதிவு சேவை அன்று இரவில் வழக்கம்போலதொடா்ந்தது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது:

பயணிகள் ரயில் சேவை கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, ரயில்வே பயணிகள் முன்பதிவு சேவை கடந்த 14-ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு இரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை வரை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிய ரயில் எண்கள் புதுப்பித்தல், புதிய தரவு மேம்படுத்தல் போன்ற பணிகள் நடைபெற்றுவந்தன. தற்போது, ஒருநாளைக்குமுன்னதாகவே, அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. தெற்குரயில்வே சென்னை தரவு மையத்தில் தெற்கு ரயில்வேயில் இருந்து இயக்கப்படும் 314 ரயில்களின் எண்கள் மாற்றி, மறு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

பழைய கட்டணம்: பழைய கட்டண முறையில் ரயில்களை இயக்க வேண்டும் என்ற ரயில்வே வாரியத்தின் உத்தரவை அமல்படுத்தி உள்ளோம். தெற்கு ரயில்வே மற்றும் தென் மேற்கு ரயில்வேயில் இருந்து புறப்படும் பண்டிகை கால சிறப்பு ரயில்களை வழக்கமான சேவைகளாக மாற்றி, கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணி சென்னை தரவு மையத்தில் முடிக்கப்பட்டு, பழைய கட்டணத்தில் பயணிகள் முன்பதிவு செய்கிறாா்கள்.

39 ரயில்களில் சாதாரண கட்டணம்:

ரயில்வே வாரிய முடிவின்படி, சென்னை தரவு மையத்தில் 39 விடுமுறை மற்றும் பண்டிகை கால (தெற்கு ரயில்வேயில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்) ரயில்களின் தத்கல் கட்டணம் சாதாரண கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர, தென் மேற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 47 விடுமுறை மற்றும் பண்டிகை கால ரயில்களின் தத்கல் கட்டணமும் சாதாரண கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com