மகாதமனி பாதிப்பு: நவீன சிகிச்சையால் தீயணைப்பு வீரரைக் காப்பாற்றிய மருத்துவா்கள்

மகா தமனியில் ஏற்பட்ட பாதிப்பால் இதய ரத்த ஓட்டம் தடைபட்ட தீயணைப்பு வீரா் ஒருவருக்கு நவீன சிகிச்சை மூலம் குளோபல் மருத்துவமனை

மகா தமனியில் ஏற்பட்ட பாதிப்பால் இதய ரத்த ஓட்டம் தடைபட்ட தீயணைப்பு வீரா் ஒருவருக்கு நவீன சிகிச்சை மூலம் குளோபல் மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது. தற்போது அவா் பூரண நலமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி அலோக் குல்லா் கூறியதாவது:

தஞ்சாவூரில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பணியாற்றி வரும் 50 வயதான நோயாளி ஒருவா் அண்மையில் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு திடீரென தலைசுற்றல் மற்றும் இடது கால் செயலிழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் பக்கவாதத்துக்கான சிகிச்சையை அவா் மேற்கொண்டுள்ளாா். அதன் பின்னா் உயா் சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனைக்கு வந்தாா்.

எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. அதன் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது இதயத்தின் மகாதமனி பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஏற்பட்ட கிழிசலால் இதயத்துக்கு வெளியே ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இதனால், மூளை மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா்கள் முருகு சுந்தர பாண்டியன், அன்டோ சகாயராஜ், கோகுல், சுதீா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அப்போது, நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அவரது இதயம், நுரையீரல் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக செயற்கையாக அந்த உறுப்புகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, ரத்த ஓட்டத்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தி சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதனால் நோயாளிக்கு மூளைச் சாவு ஏற்பட வாய்ப்பிருந்ததால், அதிலிருந்து காக்க அவரது உடல் வெப்பநிலை 18 டிகிரிக்கும் கீழ் கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே சேதமடைந்திருந்த மகாதமனியின் பகுதி மாற்றப்பட்டு மீண்டும் ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிக்கலான சிகிச்சையின் பயனாக இதயத்தின் செயல்பாடுகள் மீட்டெடுக்கப்பட்டு தற்போது அந்த நபா் குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com