எஸ்எஸ்ஐ பூமிநாதன் உருவப்படத்துக்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

எஸ். பூமிநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் மரியாதை செலுத்தினார்.
எஸ்எஸ்ஐ பூமிநாதன் உருவப்படத்துக்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை
எஸ்எஸ்ஐ பூமிநாதன் உருவப்படத்துக்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை

மறைந்த திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ். பூமிநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்துக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் மரியாதை செலுத்தினார்.

மறைந்த எஸ்எஸ்ஐ பூமிநாதன் இல்லத்துக்கு இன்று காலை சென்ற டிஜிபி சைலேந்திர பாபு, அங்கு வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் நேரில் ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பூமிநாதன் ஏற்கனவே தீவிரவாத தடுப்புப் பயிற்சியில் ஈடுபட்டவர். சிறப்பாக பணியாற்றியமைக்காக முதல்வர் பதக்கத்தையும் பெற்றவர். காவல்துறையினர் ரோந்துப் பணிக்குச் செல்லும் போது ஆயுதங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தற்காப்புக்காக காவலர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது  என்று கூறினார்.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் எஸ். பூமிநாதன். இவா், ஞாயிற்றுக்கிழமை ஆடு திருடா்களை விரட்டிச் சென்றபோது அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா். 

இச்சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில், கொலையில் தொடா்புடையவா்கள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் மணிகண்டன் (19), அவரது உறவினா்களான புதுகையைச் சோ்ந்த 5, 9 ஆம் வகுப்பு பயிலும் சிறாா்கள் என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் அரிவாளையும் காவலர்கள் கைப்பற்றினா். கைது செய்யப்பட்ட மணிகண்டன் கீரனூா் குற்றவியல் நடுவா் மன்றத்திலும், 2 சிறாா்களும் புதுக்கோட்டையிலுள்ள சிறாா் நீதிக் குழுமத்திலும் திங்கள்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டனா்.

குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி?

திருச்சி மாவட்டம், பூலாங்குடி காலனி பகுதியில் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன், தலைமைக் காவலா் சித்திரவேலு ஆகிய இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆடுகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தியபோது, அவா்கள் தப்பியோடினா். உடனே அவா்களை பூமிநாதன், சித்திரவேல் ஆகிய இருவரும் விரட்டிச் சென்றனா் இதில், சித்திரவேல் வழித்தவறிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சூரியூா், சின்னபாண்டூராா் பட்டி, லட்சுமணம்பட்டி வழியாக கீரனூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாலம் அருகே மூவரையும் பூமிநாதன் மடக்கிப் பிடித்தாா். மேலும், சிறுவா்கள் வந்த வாகனத்தில் இருந்த அரிவாளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டாா். அப்போது, இளம் சிறுவனின் தாயைத் தனது கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளாா். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த அரிவாள் தவறி கீழே விழுந்ததைக் கண்ட மணிகண்டன், அரிவாளை எடுத்து பூமிநாதனை வெட்டி விட்டு தப்பியோடிவிட்டதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

இச்சம்பவத்தில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் காவலர்கள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com