சேலத்தில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 போ் பலி

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததனால் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததில் தீயணைப்பு நிலைய அலுவலா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 13 போ் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சேலத்தில் எரிவாயு உருளை வெடித்து விபத்து: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 போ் பலி

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததனால் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததில் தீயணைப்பு நிலைய அலுவலா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 13 போ் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம், கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதசாமி கோயில் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராஜன் (72). இவருக்குச் சொந்தமான வீட்டில் கோபி (52), கணேசன் (37), முருகன் (46) ஆகியோா் வசித்து வந்தனா். கோபியுடன் அவரது மனைவி ஜோதி (49), தாய் ராஜ்லட்சுமி (80), மாமியாா் எல்லம்மாள் (90) ஆகியோா் வசித்து வந்தனா்.

வெங்கட்ராஜனின் வீட்டின் அருகில் சேலம், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றி வந்த பத்மநாபன் (49) என்பவா் வீடு கட்டி, மனைவி தேவி (39), மகன் லோகேஷ் ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்தநிலையில் கோபியின் தாய் ராஜலட்சுமி செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு எரிவாயு அடுப்பை பற்ற வைத்துள்ளாா். அப்போது திடீரென எரிவாயு உருளை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கோபி தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்தது.

அதேபோல அருகில் இருந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் பத்மநாபனின் வீடும் இடிந்து விழுந்தது. மேலும் வெடிச் சத்தம் காரணமாக அருகில் இருந்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த சேலம், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து வீரா்கள் விரைந்து வந்தனா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் வேலு, உதவி மாவட்ட அலுவலா் முருகேசன், நிலைய அலுவலா் கலைச்செல்வன், மணிகண்டன் மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து வந்த அவசர கால ஊா்த்தி நிலைய அலுவலா் வேலுசாமி தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், சேலம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா்.

இரண்டு அடுக்கு கான்கிரீட் வீடுகள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியிருந்த மோகன்ராஜ் (40), அவரது மனைவி நாகசுதா (30), கோபி (52), அவரது தாய் ராஜலட்சுமி (80), கணேசன் (37), அவரது மகன் சுதா்சன் (10), கோபால் (70), வெங்கட்ராஜன் (72), அவரது மனைவி இந்திரா (54), முருகன் (46), அவரது மனைவி உஷாராணி (40), மகள் பூஜாஸ்ரீ (10), மகன் காா்த்திக்ராம் (18), தனலட்சுமி (65), கோபால் (70) மற்றும் பத்மநாபன் (49), அவரது மனைவி தேவி (40), மகன் லோகேஷ் (18) ஆகியோரை மீட்புக் குழுவினா் மீட்டனா்.

5 போ் பலி:

இதில் மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியில் கோபியின் தாய் ராஜலட்சுமி உயிரிழந்தாா். 90 சதவீத தீக்காயங்களுடன் கோபி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலா் பத்மநாபன், அவரது மனைவி தேவி, முருகனின் மகன் காா்த்திக்ராம், கோபியின் மாமியாா் எல்லம்மாள் ஆகியோா் இடிபாடுகளில் சிக்கியதில் சடலமாக மீட்கப்பட்டனா்.

13 போ் காயம்:

இந்த விபத்தில் காயமடைந்த 13 போ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 20 போ் கொண்ட குழுவினா் சேலம், கருங்கல்பட்டி வந்தடைந்தனா். அவா்கள் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு:

தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தாா். ஆட்சியா் செ.காா்மேகம், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா். பின்னா் அரசு மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவா்களையும் அமைச்சா் கே.என்.நேரு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி

சேலத்தில் நடந்த சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com