மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழைத்தண்ணீர்: வெளியேற முடியாமல் மக்கள் முடக்கம் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தொடர் மழையால் காட்டு உடைகுளம் பகுதியில் வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
மானாமதுரையில் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைத்தண்ணீர்
மானாமதுரையில் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைத்தண்ணீர்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தொடர் மழையால் காட்டு உடைகுளம் பகுதியில் வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மானாமதுரை பகுதியில் வடகிழக்கு மழை தீவிரத்தால் இரவு பகலாக மழை கொட்டி வருகிறது. அவ்வப்போது மழை நின்று வெயில் முகம் காட்டினாலும் மீண்டும் மழை தொடர்கிறது. இதனால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாசனக் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி மறுகால் பாய்கிறது. சாலைகள் சேதமடைந்து சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஈரப்பதத்தால் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் இடிந்து வருகின்றன.

மானாமதுரை நகரில் பல இடங்களில் தாழ்வான இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. குறிப்பாக மானாமதுரை 1 ஆவது வார்டு காட்டு உடைகுளம் கணபதிநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைத்தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்ததால் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் மிதக்கின்றன. 

தெருக்களில்  இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் இங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைத்தண்ணீர்.

இப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால்  காட்டு உடைகுளம் பகுதியில் தேங்கும்  தண்ணீரின் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மழைத்தண்ணீருடன் காட்டு உடைகுளம் பகுதியிலுள்ள நீர்பிடிப்பு பகுதிகளுக்கு வந்து சேரும் தண்ணீரும் வீடுகளை சூழ்ந்துள்ளன. 

இதனால் காட்டு உடைகுளம் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே அரசு துறை நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து காட்டு உடைகுளம் பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் தொற்றுநோய் ஏற்படாதவாறு இப்பகுதியில் மருத்துவத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com