கோவையில் ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை

கோவை அருகே ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம்: ரயில்வே போலீசார் விசாரணை

கோவை அருகே ரயில் மோதியதில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் மற்றும் உதவியாளரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக - கேரள எல்லையான நவக்கரை அருகே ரயில் பாதை ஒன்று உள்ளது. கேரளத்திலிருந்து ரயில்கள் இந்த பாதை வழியாக தமிழகத்திற்குச் சென்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணி அளவில் மங்களூர் - சென்னை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் இப்பாதையில் வந்து கொண்டிருந்தது. வாளையாறு பகுதியைக் கடந்து மதுக்கரைக்கு இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் ரயில் வந்த போது, ரயில் தண்டவாளத்தை 3 காட்டு யானைகள் கடப்பதை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருப்பினும் ரயிலை நிறுத்துவதற்கு முன்பாக அதிவேகத்தில் வந்த ரயில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க மக்னா யானையுடன் வந்த இரண்டு பெண் யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தன. இதில் ஒரு யானை தண்டவாளத்திலேயே விழுந்துவிட, 2 யானைகள் அருகிலிருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டன.

இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து ரயில் ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து அப்பாதையில் சிறிது நேரம் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், யானைகளின் உடல்களுக்கு கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து யானைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே ரயிலை இயக்கிய ஓட்டுநர் சுபயர் மற்றும் அவரது உதவியாளர் முகில் ஆகியோரை வாளையார் பகுதியில் வைத்து ரயில்வே போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்க வேண்டும் என்ற  கட்டுப்பாட்டை மீறி வேகமாக இயக்கப்பட்டிருந்தால் வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ரயில் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக-கேரள எல்லையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதையை தினந்தோறும் ஏராளமான வனவிலங்குகள் கடந்து சென்று வருகின்றன. குறிப்பாக யானைகள் இந்தப்பகுதியை அதிகளவில் கடப்பதால், ரயில்களுக்கு வேகக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இந்த பாதையில் யானைகள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், மீண்டும் அதிவேகத்தில் ரயில்களை இயக்க அனுமதித்த ரயில்வே துறையை பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் யானைகள் கடப்பது வாடிக்கையாக இருப்பதால், இப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையையும் வனத்துறையினர் அலட்சியப்படுத்தியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்து 3 பேருயிர்கள் இன்னுயிரை இழந்துள்ளதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து இருமாநில அரசுகளும், ரயில்வேதுறையும் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வனப்பகுதி வழியாக செல்லும் அதிவேக ரயில்களில் அடிபட்டு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 யானைகள் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com