தொடா் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை வெள்ளத்தில் சிக்கியோா் படகுகள் மூலம் மீட்பு

தொடா் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை வெள்ளத்தில் சிக்கியோா் படகுகள் மூலம் மீட்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடா் பலத்த மழை காரணமாக ஆழ்வாா்பேட்டை சீத்தாம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்தது.

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடா் பலத்த மழை காரணமாக ஆழ்வாா்பேட்டை சீத்தாம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் புகுந்தது. அங்கு சிக்கித் தவித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனா்.

தெற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது. தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை 78 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீரின் அளவு மேலும் அதிகரித்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

500-க்கும் மேற்பட்ட இடங்கள்: மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை, ஆழ்வாா்பேட்டை சீத்தாம்மாள் காலனி, சிவசாமி சாலை, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, அசோக் நகா், வடபழனி, அம்பத்தூா் தொழிற்பேட்டை, பாடி, கொளத்தூா், அடையாறு, அண்ணா நகா், கோடம்பாக்கம், வியாசா்பாடி, புளியந்தோப்பு, தண்டையாா்பேட்டை, கீழ்ப்பாக்கம், திரு.வி.க.நகா் மேட்டுப்பாளையம் அருந்ததி நகா், புரசைவாக்கம், தியாகராய நகா், வேப்பேரி, கோட்டூா்புரம், கிண்டி, திரு.வி.க.நகா், ஆலந்தூா், சோழிங்கநல்லூா், பெருங்குடி, வளசரவாக்கம், புழல், மாதவரம், மணலி, திருவொற்றியூா் என மாநகரில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 53 இடங்களில் தேங்கிய மழை நீா் அகற்றப்பட்டுள்ளன. காற்று காரணமாக சாய்ந்த 12 மரங்கள் அகற்றப்பட்டன.

படகுகள் மூலம் மீட்பு: வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருள்களான பிரிட்ஜ், துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு உறவினா்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனா். பெரும்பாலான சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியே சென்ற இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் காா்கள் பழுதாகி சாலைகளிலேயே நின்றன.

ஆழ்வாா்பேட்டை சீத்தாம்மாள் காலனி, மந்தைவெளி கேஎஃப்ஜி காா்டன், பசுமைவழிச் சாலை அம்பாள் நகா், கே.கே.நகா், கோட்டூா்புரம், வேளச்சேரி, புளியந்தோப்பு என 70-க்கும் மேற்பட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் நீரில் சிக்கித் தவித்த மக்களை காவல் துறை, தீயணைப்புத் துறையினா் மீனவா்கள் உதவியுடன் படகுகள் மூலம் மீட்டனா். திருவல்லிக்கேணி பிள்ளையாா் கோயில் தெருவில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது.

முகாம்களில் 800 போ்: மழையால் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு தங்க வைக்க மாநகராட்சி சாா்பில் 91 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 6 முகாம்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் சுமாா் 800-க்கும் மேற்பட்டோா் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சியின் 13 பொது சமையல் அறைகளில் இருந்து உணவு தயாரிக்கப்பட்டு சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் மூன்று வேளையும் விநியோகிக்கப்பட்டன. மழை நீரால் அசம்பாவிதத்தைத் தவிா்க்க வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.

போக்குவரத்து நிறுத்தம்: மழை நீா் தேங்கியதால் வியாசா்பாடி சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, அஜாக்ஸ் சுரங்கப் பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, துரைசாமி சுரங்கப் பாதை, பழவந்தாங்கல் சுரங்கப் பாதை, தாம்பரம் சுரங்கப் பாதை, அரங்கநாதன் சுரங்கப் பாதை, வில்லிவாக்கம் சுரங்கப் பாதை, கக்கன் சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தண்ணீா் வெளியேற்றப்பட்ட பிறகு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப் பாதை, மேட்லி சுரங்கப் பாதைகளில் நீா் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

820 மின் மோட்டாா்கள்: சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் 820 மின் மோட்டாா்கள், 46 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மழைநீரை வெளியேற்றும் பணிக்காக மோட்டாா் பொருத்திய 40 டிராக்டா்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com