அண்ணாமலைப் பல்கலை.யில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

அண்ணாமலைப் பல்கலை.யில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலை.யில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

அண்ணாமலைப் பல்கலை.யில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம், என்.எம்.ஆர்., தினக்கூலி, மற்றும் கருணை அடிப்படையில் பணியாற்றி வரும் 346 பணியாளர்களை பல்கலைக்கழகத்தின் நிதிநிலையை காரணம் காட்டி நிர்வாகம் பணி நீக்கம் செய்யப்போவதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 2013ம் ஆண்டில் தமிழக அரசு கையகப்படுத்தி, அரசின் கட்டுப்பாட்டில் இயக்கி வருகிறது. முந்தைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தினரால் ஆசிரியர்கள், ஊழியர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தை கையகப்படுத்திய தமிழக அரசு யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. மாறாக, அவர்களை பணி நிரவல் அடிப்படையில் மாற்றம் செய்து தமிழக அரசுத் துறையில் பணியமர்த்தியது. ஆனால் தற்போது தொகுப்பூதிய முறையிலும், என்.எம்.ஆர்., தினக்கூலி அடிப்படையிலும் பணிபுரிந்து வருபவர்களை பணி நீக்கம் செய்வது என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது நியாயமற்றதாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 205 பணியாளர்களும், என்.எம்.ஆர். தினக்கூலி அடிப்படையில் 140 பணியாளர்களும் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.3,500 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தினக்கூலி பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ. 200/- தான் வழங்கப்படுகிறது. அதுவும் அவர்கள் பணி செய்யும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதியம் கூட இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தினக்கூலி தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மாறாக, பணி நீக்கம் செய்யப்போவதாக எடுத்துள்ள முடிவுகள் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என ஆட்சிமன்றக்குழு முடிவு எடுத்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேசமயம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக எடுத்துள்ள முடிவுகள் மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, தமிழக அரசும், உயர்கல்வித்துறையும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய முறையிலும், என்.எம்.ஆர். மற்றும் தினக்கூலி அடிப்படையிலும் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com