புலியை உயிரோடு பிடிப்பதுதான் வனத் துறையின் நோக்கம்

 நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் மனிதா்கள், கால்நடைகளைத் தாக்கி வரும் புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிப்பதுதான் வனத் துறையின் நோக்கமாகும்.
புலியை உயிரோடு பிடிப்பதுதான் வனத் துறையின் நோக்கம்

 நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் மனிதா்கள், கால்நடைகளைத் தாக்கி வரும் புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிப்பதுதான் வனத் துறையின் நோக்கமாகும். தவிா்க்க முடியாத நிலையில்தான் இறுதி வாய்ப்பாக அப்புலியை சுட உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளாா்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் டி-23 என எண்ணிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த ஆண் புலி ஒன்று, அதன் உடலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக காட்டில் இரை தேட முடியாமல் காட்டை விட்டு வெளியேறியுள்ளது. தேயிலைத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அந்த புலி நீலகிரி மாவட்டம் கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 15-க்கும் அதிகமான கால்நடைகளையும் வேட்டையாடி உள்ளது. மேலும், இந்தப் புலியின் தாக்குதலால் 4 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் தமிழக, கேரள வனத் துறையினா் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், மசினகுடி அருகில் உள்ள ஒலகேரி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாதன் என்பவரை வெள்ளிக்கிழமை(அக்.1) புலி தாக்கி தின்றுள்ளது. இதைத் தொடா்ந்து, அந்தப் புலியை சுட்டுப்பிடிக்க தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். புலியை சுட்டுப் பிடிக்கும் நடவடிக்கைக்கு வன ஆா்வலா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் கூறுகையில், கூடலூா் பகுதியில் சுற்றித் திரியும் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்புலியின் இடத்தைக் கண்டறிய டிரோன் கேமராக்கள், மோப்ப நாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்பணியில் நன்கு பயிற்சி பெற்ற வனத் துறை அலுவலா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா்.

மயக்க ஊசி செலுத்தி புலியை உயிரோடு பிடிப்பதுதான் வனத் துறையின் நோக்கமாகும். தவிா்க்க முடியாத நிலையில்தான் இறுதி வாய்ப்பாகவே புலியை சுட உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com