காவல்துறையின் முக அடையாளம் கண்டறியும் செயலி: முதல்வர் தொடக்கி வைத்தார்

முக அடையாளம் மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  தொடக்கி வைத்தார்.
முக அடையாளம் கண்டறியும் செயலி: முதல்வர் தொடக்கி வைத்தார்
முக அடையாளம் கண்டறியும் செயலி: முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னை: காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.10.2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை தொடங்கி வைத்தார்.

இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது (எஃப்ஆர்எஸ்), ஒரு தனி நபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில்  சிசிடிஎன்எஸ்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்பட தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறிய பயன்படுகிறது.  இதுவரை, 5.30 இலட்சம் புகைப்படங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

எஃப்ஆர்எஸ் மென்பொருளை காவல் நிலையத்தில், இணையதள வசதியுள்ள கணினியிலும், களப்பணியின்போது எஃப்ஆர்எஸ் செயலியை கைப்பேசியிலும் காவல் அலுவலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயலியின் மூலம் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களை தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம். இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால், காவல் அலுவலர்கள் இச்செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரை பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்செயலியைப் பயன்படுத்தி, காவல் அலுவலர்கள் ரோந்துப் பணி, வாகனத் தணிக்கை மற்றும் இதர காவல் பணிகளை மேற்கொள்ளும் போது, குற்றவாளிகள் / சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படம் மூலமாக அவர்களின் முழு குற்றப் பின்னணியினையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கும்போது, அவர்களின் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதனை கண்டறிந்து கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அத்துடன் காணாமல் போன நபர்களையும் இச்செயலி மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வழிவகை ஏற்படும்.

இந்த எஃப்ஆர்எஸ் செயலியானது, குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். வருங்காலங்களில் சிசிடிவி வீடியோ பதிவுகளில் உள்ள ஒரு நபரின் முகத்தினை அடையாளம் கண்டறிய ஏதுவாக, எஃப்ஆர்எஸ் செயலியில், வீடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தேகத்துக்குரிய நபர்களோ, தேடப்படும் குற்றவாளிகளோ அல்லது காணாமல் போனவர்களோ பேருந்து நிலையம், இரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் திருவிழாக்கள் போன்ற பொது இடங்களில் நடமாடினால், அவர்களை எளிதாக கண்டுபிடிக்க இயலும். மேலும், கலவரம் அல்லது பெருந்திரளாக மக்கள் கூடியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை விவரத்தினை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பிற்கு தேவையான காவலர்களை பணியமர்த்த பயன்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com