உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 9.75% வாக்குகள் பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி 9.75 சதவிகித வாக்குகள் பதிவாகின.
வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்.
வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி நிலவரப்படி 9.75 சதவிகித வாக்குகள் பதிவாகின.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 204 கிராம ஊராட்சி தலைவர், 1,731 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு  நேரடி தேர்தல் நடைபெறுகிறது. 

இதில் அம்பாசமுத்திரம்,  சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை,  பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 32 பேர் போட்டியில் உள்ளனர். இதேபோல் 62 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 319 பேர் போட்டியிடுகின்றனர். 115 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 110 பதவிகளுக்கு 534 பேர் போட்டியில் உள்ளனர். 1,113 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 211 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். எஞ்சிய 902 பதவியிடங்களுக்கு 3,006 பேர் போட்டியிடுகின்றனர். 

முதல் கட்ட தேர்தலில் 5,035 வாக்குப் பதிவு அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 பறக்கும் படை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, சேரன்மகாதேவி ஒன்றியங்களுக்கு தலா ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்ட தேர்தலுக்காக 621 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்காக தனித்தனியாக தலா 19 வாக்குப் பதிவு மையங்களும், இரு பாலரும் வாக்களிக்கும் வகையில் 583 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 64 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலமும், 74 வாக்குச்சாவடிகள் விடியோ கிராபர் மூலமும், 44 வாக்குச்சாவடிகள் நுண் பார்வையாளர் மூலமும் கண்காணிக்கப்படுகிறது. 

முதல் கட்ட தேர்தலில் 1,69,765 ஆண் வாக்காளர்கள், 1,78,234 பெண் வாக்காளர்கள், 43 மூன்றாம் பாலினத்தவர்  என மொத்தம் 3,48,042 வாக்காளர்கள் உள்ளனர்.

புதன்கிழமை காலை 6.45 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு முன்பு குவிய தொடங்கினர்.  காலை 9 மணி நிலவரப்படி அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 3,526 வாக்குகள் (7.72 சதவிகிதம்) பதிவாகியிருந்தது. 
இதேபோல சேரன்மகாதேவியில் 2136 வாக்குகள் (7.57 சதவிகிதம்), மானூரில் 13,723 வாக்குகள் (10.34 சதவிகிதம்), பாளையங்கோட்டையில் 9,230 வாக்குகள் (9.55 சதவிகிதம்), பாப்பாக்குடியில் 5378 (11.88 சதவிகிதம்) என மொத்தம் 33 ஆயிரத்து 993 வாக்குகள் (9.75 சதவிகிதம்) பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com