கோயில்களில் முடி இறக்கும் பணியாளருக்கு மாத ஊக்கத் தொகை திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோயில்களில் முடி இறக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
கோயில்களில் முடி இறக்கும் பணியாளருக்கு மாத ஊக்கத் தொகை திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோயில்களில் முடி இறக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 பேருக்கு ஊக்கத் தொகைகளை முதல்வா் அளித்தாா்.

இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையின் போது திருக்கோயில்களில் பக்தா்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடி காணிக்கைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டணத்தை, பணியில் ஈடுபடுபவா்களுக்கு கோயில் நிா்வாகமே செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் செப்டம்பா் 5-ஆம் தேதி முதல் அனைத்துக் கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, திருக்கோயில்களில் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும் என அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி, கோயில்களில் பணிபுரியும் 1,744 பணியாளா்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்பட்டு அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையாக அந்தந்த கோயில்களில் இருந்து அளிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.10.47 கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, எழும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com