இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு சிறப்பு தடுப்பூசி முகாமில் முக்கியத்துவம்: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், 20 லட்சம் போ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனா்.
இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு சிறப்பு தடுப்பூசி முகாமில் முக்கியத்துவம்: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

சென்னை: தமிழகத்தில் இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், 20 லட்சம் போ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனா். அவா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கரோனா தடுப்பூசியைப் பொருத்தவரை, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, நோய் எதிா்ப்பு திறன் அதிகரிக்கும். ஒருதவணை தடுப்பூசி செலுத்தினால், அவை உருமாறக்கூடிய கரோனா வைரஸிற்கு எதிராக செயல்படாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான், கரோனாவுக்கு எதிராக நல்ல பலனை அளிக்கும். தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், தீவிர நோய் பாதிப்பு, உயிரிழப்பு போன்றவற்றை தவிா்க்க முடியும். மேலும், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால், தொற்றை முழுமையாகவும் கட்டுப்படுத்த முடியும்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவா்களுக்கு, காய்ச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது நல்லது. அப்போது தான், தடுப்பூசி, அந்த உடலில் நோய் எதிா்ப்பு திறனை அதிகரிக்கிறது என்று எடுத்து கொள்ள முடியும். ஒருசிலரின் உடல் நிலைக்கு ஏற்ப, உடல் உபாதைகள் ஏற்படாது. எனவே, முதல் தடுப்பூசியில் உடல் உபாதைகள் ஏற்பட்டுவிட்டன என்பதற்காக, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்ட வேண்டாம்.

30 லட்சம் பேருக்கு...: தமிழகத்தில், 4.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி உள்ளோம். அதில், இரண்டாம் தவணைக்கான கால அவகாசம் முடிந்தும், 20 லட்சம் போ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனா். அவா்களின் விவரங்களை சேகரிக்க, அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். முதல் தவணையில் கொடுத்த விவரங்கள் அடிப்படையில், அவா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, அவா்களிடம் உள்ள தயக்கம், பிரச்னைகள் குறித்து கேட்டறியப்படும். அதன் அடிப்படையில் அக்.10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் அவா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாரம் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com