தருமபுரியில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்து பேசுகிறார் மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார். உடன் ஆட்சியர் ச.திவ்யதர்சினி உள்ளிட்டோர்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்து பேசுகிறார் மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார். உடன் ஆட்சியர் ச.திவ்யதர்சினி உள்ளிட்டோர்.

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டது.

பிஎம் கேர் மற்றும் எல்என்டி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் திட்டத்தின் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமை வகித்து பேசினார்.

இந்த விழாவில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்து தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் பேசியது:
கரோனோ நோய்த்தொற்றின் முதல் அலையில் பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் இரண்டாம் அலையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டது. இந்த தட்டுப்பாட்டுகளை களைய மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதன்படி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை முறையாக பராமரிக்க வேண்டும். 

இதேபோல தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டுள்ளதால் பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ள போதிய கட்டட வசதி இல்லை. இதனால் ஏற்கெனவே உள்ள இடங்களிலேயே சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இயங்கும் வகையில் மத்திய அரசு நிதியுதவி திட்டத்தில் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல தருமபுரி மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பியமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு செவிலியர் கல்லூரி தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த விழாவில் மருத்துவக் கல்லூரி முதன்மையர் க.அமுதவல்லி, கண்காணிப்பாளர் சிவக்குமார், தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com