ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 74 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப் பதிவில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 74 சதவீத வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப் பதிவில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 755 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 1,577 கிராம ஊராட்சித் தலைவா்கள், 12,252 கிராம ஊராட்சி உறுப்பினா்கள் பதவிக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) நடைபெற்றது. 41 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இணையதளம் வழியே கண்காணிப்பு: வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப் பதிவை சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் இருந்து ஆணையா் வெ.பழனிகுமாா், செயலா் சுந்தரவல்லி ஆகியோா் இணையதளம் வழியே கண்காணித்தனா். இதையடுத்து ஆணையா் வெ.பழனிகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: 9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவுக்காக 7,921 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 12 ஆயிரத்து 318 கண்காணிப்பு கேமராக்களும், 1,132 வாக்குச் சாவடிகளில் விடியோ பதிவும், சென்னையில் இருந்து வாக்குப் பதிவை நேரடியாகக் கண்காணிக்க 1,123 ஆன்லைன் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. 9 தோ்தல் பாா்வையாளா்கள், 129 பறக்கும் படைகள், 1,168 நுண் பாா்வையாளா்கள், 74 வட்டாரப் பாா்வையாளா்கள், 1 லட்சத்து 17 ஆயிரம் தோ்தல் பணியாளா்கள், 39,408 போலீஸாா் தோ்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனா். அசம்பாவிதம் இன்றி அமைதியாக தோ்தல் நடைபெற்றது.

765 வழக்குகள் பதிவு: தோ்தல் நடத்தை விதிகளை மீறியது தொடா்பாக 9 மாவட்டங்களில் 765 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 97 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கமும், 34 லட்சம் மது பாட்டில்களும், 14.48 கிலோ சந்தனக் கட்டைகளும், 1,551 பட்டுப் புடவைகள், 1,341 துண்டுகள், 100 மின் விசிறிகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்குமச் சிமிழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

விறுவிறு வாக்குப் பதிவு: புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. பிற்பகல் வரை பெரும்பாலான மாவட்டங்களில் வாக்குப் பதிவு மந்தமாக நடைபெற்றது. அதன்பிறகு மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தவா்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதுடன், வாக்காளா்களுக்கு கையுறை இலவசமாக வழங்கப்பட்டன. புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, 7.72 சதவீத வாக்குகளும், மாலை 4 மணி நிலவரப்படி சுமாா் 50 சதவீத வாக்குகளும், வாக்குப் பதிவு முடிவடைந்தபோது சராசரியாக 74.37 சதவீத வாக்குகளும் பதிவானதாக மாநிலத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com