தமிழகத்தின் தியாக தீபங்கள்- 54: சர்தார் அ.வேதரத்தினம் பிள்ளை

காந்தியடிகள் தலைமையில் பெல்காமில் 1920-இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை பங்கேற்றார். அப்போது அவருக்கு வயது 23.
தமிழகத்தின் தியாக தீபங்கள்- 54: சர்தார் அ.வேதரத்தினம் பிள்ளை

காந்தியடிகள் தலைமையில் பெல்காமில் 1920-இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சர்தார் அ. வேதரத்தினம் பிள்ளை பங்கேற்றார். அப்போது அவருக்கு வயது 23.

இம்மாநாட்டு நிகழ்வுகள் சர்தாரின் இதயத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கின. திரும்பிய பிறகு, மக்களிடம் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்புவது, இயக்கத்தை உருவாக்குவது என முழுநேரச் செயற்பாட்டாளராக உருவெடுத்தார்.

தஞ்சை மாவட்ட அரசியல் மாநாட்டை 1927-ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் எழுச்சியுடன் நடத்தினார். இதன் வெற்றி 1929-இல் அதே வேதாரண்யத்தில் தமிழ் மாகாண அரசியல் மாநாட்டை நடத்த அடித்தளமிட்டது. மாகாண மாநாட்டில் பங்கேற்க அப்போது கல்கத்தாவிலிருந்த காந்தியடிகளை நேரில் சந்தித்து வற்புறுத்தி அழைத்தார். தான் வர இயலாத சூழலில் வல்லபபாய் படேலையும், மகாதேவ தேசாயையும் காந்தியடிகள் அனுப்பிவைத்தார்.

இந்த இரண்டு மாநாடுகளின் எழுச்சியே உப்பு சத்தியாகிரகத்திற்கான களமாக வேதாரண்யத்தை தேர்வு செய்யக் காரணங்களாக அமைந்தன. 1930 ஏப்ரல் 13-இல் திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி ராஜாஜி தலைமையில் அறப்போராட்ட யாத்திரை புறப்பட்டது.  

ஏற்பாடு செய்வது, உப்பு அள்ளும் களத்தை ஆயத்தப்படுத்துவது போன்ற பணிகளை ஒரு தளபதிபோல திட்டமிட்டுச் செய்தார்.

மாவட்ட ஆட்சியரின் கெடுபிடி உத்தரவுகள், காவல் துறையின் தாக்குதல்கள் என அத்தனை இன்னல்களையும் தாண்டி சத்தியாகிரகம் வெற்றி பெற்றது. ராஜாஜி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சர்தார் மீது சிறைத் தண்டனை, அபராதம், சொத்துப் பறிமுதல் ஆகிய மும்முனைத் தாக்குதல் ஏவப்பட்டது. வசதி, பாரம்பரியம் என வாழ்ந்த சர்தாரின் சொத்துகள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட்டதும், சர்தார் சிறையிலிருந்ததும் குடும்பம் சொல்லொணா வறுமையில் வாடக் காரணங்களாக விளங்கின. சத்தியாகிரக வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் இவருக்கு சர்தார் பட்டம் வழங்கப்பட்டது. 

பறிமுதலான சொத்துகள் காந்தியடிகளின் தலையீட்டால் பின்னர் சர்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. சர்தார் 1930, 1931-32, 1937, 1940 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று நான்கு முறை சிறை சென்றுள்ளார்.

1937, 1946, 1957 தேர்தல்களில் வென்று மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக விளங்கியுள்ளார். தொடர்ந்து 19 ஆண்டுகள் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மற்றும் தலைவராக இருந்துள்ளார். மக்களிடத்தில் விடுதலைச் சிந்தனையை வீறு கொண்டு எழச் செய்யும் விதத்தில் மாநிலமெங்கும் உணர்ச்சிமிகு உரையாற்றியுள்ளார்.

கதர், தீண்டாமை எதிர்ப்பு, மது ஒழிப்பு, ஆதாரக் கல்வி போன்ற நிர்மாணத் திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துள்ளார். "கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம்' என்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண் குழந்தைகளுக்கான மகளிர் தொண்டு மற்றும் கல்வி, தொழிற்பயிற்சி நிறுவனத்தை 7.2.1946-இல் தொடங்கினார். அத் தொண்டும் பணியும் இன்றளவும் தொடர்கிறது. 1961-இல் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com