அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு: வைகோ இரங்கல் 

தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 
அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு: வைகோ இரங்கல் 


தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவர் அருளானந்தம் மறைவு மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர், ராமேசுவரம் மீனவர்களின் பாதுகாவலர் அருளானந்தம் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றோம்.

80-களின் தொடக்கத்தில், இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை எதிர்த்துக் களம் புகுந்தார். தீவு மீனவர் சங்கத்தைத் தொடங்கினார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களின் பாதுகாப்பான நல்வாழ்வு ஒன்றையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார்.

தற்போது தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் குற்றக் கூண்டில் நிறுத்திய போதெல்லாம் அங்கே சென்று அவர்களுக்காக வழக்குரைஞர்களை வைத்து வாதாடினார். அதேபோல, ராமேசுவரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இலங்கை மீனவர்களுக்கும் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து வாதாடி விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவியாக இருந்தார்.

மீனவர் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது என்னுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு களநிலவரங்களை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். நானும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன்.

தேசிய நிரபராதி மீனவர் கூட்டமைப்பு ஏற்படுத்தினார். ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த போது அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார். தமிழக முதல்வருடன் தொடர்பு கொண்டு அரசுத்தரப்பில் வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்று வாதாடி, விடுதலை பெற பெரும் பங்கு வகித்தார்.

ராமேசுவரத்தில் மதிமுக நடத்திய மீனவர் பாதுகாப்பு அறப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் உதவியாக இருந்தார். அவரது மறைவு, மீனவ சமுதாயத்திற்குப் பேரிழப்பு.

மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது குடும்பத்தினர், மீனவ சமுதாயத்தினரின் வேதனையில் பங்கேற்கின்றேன்” என்று வைகோ கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com