ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு கைதிகள் தப்பி ஓட்டம்: விடிய விடிய தேடி வரும் போலீசார் 

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சனிக்கிழமை இரவு தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு கைதிகள் தப்பி ஓட்டம்: விடிய விடிய தேடி வரும் போலீசார் 


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சனிக்கிழமை இரவு தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி மனோகரன் உத்தரவின் பெயரில், மாவட்டத்தில் அந்த அந்த பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும் இரவு ரோந்து பணியிலும், முக்கிய சந்திப்புகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, சனிக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி வத்திராயிருப்பு சாலையில் உள்ள கொடமுருட்டி பாலத்தில் சார்பு ஆய்வாளர் ராம்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பைக் ஒன்றில் 24 வயது மற்றும் 19 வயதுடைய இரண்டு வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அந்த வாகனத்தை தணிக்கை செய்யும் பொருட்டு வாகனத்தை நிறுத்த சொன்னபோது நிறுத்தாமல் கொடமுருட்டி பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள வாள் ஒன்று கீழே விழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து வாளையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது முத்துக்குமார்  (24) மற்றொருவர் அருண் குமார்  ( 19) என்பதும் இவர்கள் இருவரும் கூமாபட்டி ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில்  தெரியவந்தது.

மேலும் முத்துக்குமார் மீது கடந்த ஆண்டு கத்தியை காட்டி மிரட்டிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாளுடன் செல்வதால் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

பின்னர் அவர்கள் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மதுரையிலுள்ள சிறையில் அடைப்பதற்காக கார் ஒன்றின் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கிளம்பிச் சென்றனர். போகும் வழியில் சுமார் 10 மணி அளவில் கிருஷ்ணன் கோவிலில் சனிக்கிழமை இரவு உணவு அருந்திவிட்டு மதுரை செல்வதற்காக கிளம்பிய நேரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் இருட்டுக்குள் ஓடி மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 காவலர்களும் கூமாபட்டி காவல் நிலையத்திற்கும் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து தப்பியோடிய கைதிகளை மடக்கி பிடிக்கும் நோக்கத்தோடு போலீசார் அழகாபுரி சோதனைச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியில் குற்றவாளிகளை தேடும் பணியில் சனிக்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விடிய விடிய தேடியும் தப்பி ஓடிய இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

சிறையில் அடைக்க செல்லும்போது 2 கைதிகள் தப்பி ஓடியது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலும் போலீசாரிடையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com