ஆரோவில் தலைவராக தமிழக ஆளுநர் ரவி நியமனம்!

ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி



புதுச்சேரி: ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

புதுச்சேரியில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டப் பகுதியில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரம் தான் ஆரோவில். இது ஒரு சர்வதேச கூட்டுச்சமூக நகரமைப்பு.

அரவிந்தர் ஆசிரம அன்னையின்  முயற்சியால், 1968-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி சர்வதேச ஆரோவில் நகரத்தைக் கட்டும் புனிதப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு இந்தியாவிலிருந்தும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து 5000 பேர் வந்து குழுமினர். தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,800க்கும் மேற்பட்டோர் ஆரோவில் வசித்து வருகின்றனர். இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது. 

ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக இருந்துவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கரண் சிங் பதவிக்காலம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

இதையடுத்து புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய கல்வியமைச்சகம் ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில், ஆரோவில்  அறக்கட்டளையின் மறுசீரமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும், அறக்கட்டளையின் உறுப்பினராக தெலங்கான ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய கல்வியமைச்சக உயர்கல்வி பிரிவு இணைச்செயலர் நீடா பிரசாத் வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com