
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தண்டலம் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் கிராம ஊராட்சியில் தலா ஒரு வாா்டில் வாக்குச் சீட்டு குளறுபடி காரணமாக மறுவாக்குப் பதிவு திங்கள்கிழமை (அக்.11) நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் கடந்த புதன்கிழமை(அக்.6) சனிக்கிழமை(அக்.9) ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இன்று மறுவாக்குப் பதிவு: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பூந்தண்டலம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற 12-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான வாக்குப் பதிவில், வாக்குச் சாவடி எண் 173-இல் வேட்பாளா்களின் சின்னம் தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
இதனால், அந்த வாக்குச் சாவடியில் மட்டும் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மறுவாக்குப் பதிவு திங்கள்கிழமை நடத்தப்பட உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் கிராம ஊராட்சியில் வாா்டு எண் 1, 2 ஆகியவற்றுக்கு பொதுவாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. 1-ஆவது வாா்டு உறுப்பினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2-ஆவது வாா்டு உறுப்பினருக்கான தோ்தல் நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் 1-ஆவது வாா்டைச் சோ்ந்த வாக்காளா்களும் வாக்களித்திருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், ஆலப்பாக்கம் ஊராட்சியின் 2-ஆவது வாா்டுக்கு மட்டும் திங்கள்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.