வடமாநில துப்பாக்கி கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒருவர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வடமாநில துப்பாக்கி   கொள்ளையர்களில் ஒருவனை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர். 
வடமாநில துப்பாக்கி கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒருவர் கைது
வடமாநில துப்பாக்கி கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை; ஒருவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வடமாநில துப்பாக்கி  கொள்ளையர்களை தேடும் பணியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை ஈடுபட்ட அதிரடிப்படை காவலர்கள்  கொள்ளையர்களில் ஒருவனை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர். 
மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா(55). இவர் பென்னலூர் பகுதியில் சென்னை  - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது இந்திராவின் அருகில் வந்த வடமாநில இளைஞர்கள் இருவர் இந்திரா அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு சுங்கச்சாவடி அருகே உள்ள காரந்தாங்கள் பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து இந்திரா கூச்சல் போடவே சுங்கச்சாவடி அருகே இருந்த பொதுமக்கள் சிலர் கொள்ளையர்களை துரத்திச் சென்று காரந்தாங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள கருவேலமர தோப்பு பகுதியில் மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது கொள்ளயர்களில் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை சுட்டுவிடுவதாக இந்தியில் மிரட்டிவிட்டு கருவேலமர தோப்புக்குள் சென்று மறைந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. பாம்பு கடித்து மனைவி கொலை: கணவர் குற்றவாளி என்று காட்டிக்கொடுத்தது எது?

இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவலர்கள், இச்சம்பவம் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுக்கு தகவல்தெரிவித்து விட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் பதுங்கியுள்ள பகுதி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள கருவேலமர காட்டுப்பகுதி என்பதால் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கருவேலமர காட்டுப்பகுதியில் இருந்து 2 துப்பாக்கி குண்டுகளை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கொள்ளையர்கள் பதுங்கியுள்ள இடத்தை கண்டறிய ட்ரோன் மூலமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வடக்கு மண்டல காவல்துறை துணைத்தலைவர் சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினர்.

கொள்ளையர்களை தேடும் பணியில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனர். மேலும் கொள்ளையர்கள் தப்பிச்செல்லாமல் இருக்க மேவளூர்குப்பம் - பேரம்பாக்கம் சாலை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, மண்ணூர் கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனைகளிலும் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மேவளூர்குப்பம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மர்மநபர்கள்  சுற்றி வருவதாக  வந்த தகவலையடுத்து அப்பகுதியில் காவலர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது  கொள்ளையர்களில் ஒருவன் காவலர்கள் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். இதையடுத்து காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவரை கைது செய்த ஸ்ரீபெரும்புதூர் காவலர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொள்ளையன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தாஷா என்பதும், மற்றொருவர் நைம்அக்தர் என்பதும் தெரியவந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட  முர்தாஷாவிடம்  இருந்து துப்பாக்கி, தங்க நகைகள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நேம்அக்தரிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com