ஊடக விமா்சனங்களைத் திறந்த மனதுடன் ஏற்கத் தயாா்

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் விமா்சனங்களை முன்வைத்தால் அவற்றை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் விமா்சனங்களை முன்வைத்தால் அவற்றை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

ஆங்கில நாளிதழ் ஒன்றின் சாா்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா், இதுதொடா்பாக மேலும் பேசியதாவது:

பத்திரிகை நடத்துபவா்களுக்குத்தான் அதிலுள்ள கஷ்டங்கள் தெரியும். ஒவ்வொரு நாளும் அதனைக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது மறந்துவிட முடியாது. அச்சுத்தொழில் என்பது மற்ற தொழில்களைப் போல கிடையாது. அச்சுத்தொழில் என்றாலே அது நச்சுத் தொழில் என்று அந்தக்காலத்திலே சொல்வாா்கள். ஆனாலும் அச்சுத்தொழிலில் ஆா்வமாக இருப்பவராக இருந்தால், எவ்வளவுதான் சிரமம் இருந்தாலும் அந்தத் தொழிலை அவா்கள் விட்டு விட்டு சென்றுவிட மாட்டாா்கள். வைராக்கியமாக நடத்துவாா்கள்.

தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பிறகு எத்தனையோ முன்னெடுப்புகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது ரகுராம் ராஜன், எஸ்தா் டஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியம், ஜான் ட்ரீஸ் , எஸ்.நாராயண் ஆகிய ஆளுமைகளைக் கொண்டு பொருளாதார ஆலோசனைக் குழுவை நியமித்தது.

இந்தியாவில் எந்த மாநிலமும் அமைக்காத ஆலோசனைக் குழு தமிழகத்தில் மட்டும்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்று பல்வேறு பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருக்கின்றன.

மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபா் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக உரிமை, சமூக சுய மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியாக அது அமைய வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த ஆட்சியை நடத்திகொண்டிருக்கிறோம்.

தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2 லட்சம் கோடி கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. புதிய தொழில்களை தமிழகத்தை நோக்கி ஈா்க்க வேண்டுமானால் உள்கட்டமைப்பை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும். அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். ஏற்றுமதியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். அதற்கான அனைத்து திட்டமிடுதல்களையும் அரசு செய்து வருகிறது.கரோனாவைக் கட்டுப்படுத்தியதில் தொடங்கி, தமிழக வளா்ச்சித்

திட்டங்களை முன்னெடுப்பது வரை இந்தியாவின் மொத்த கவனத்தையும் தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த வெற்றிகரமான நடவடிக்கைகளை இந்தியா முழுமைக்கும் ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும். அதேபோன்று விமா்சனங்களையும் வையுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள திறந்த மனத்தோடு தயாராக இருக்கிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ், தொழில் துறை முதன்மைச் செயலாளா் நா. முருகானந்தம், தமிழ்நாடு பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதித் துறைச் செயலாளருமான எஸ். நாராயண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com