தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் சேலம், திருச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சேலம், திருச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அந்த மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமினை ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா். அப்போது மருத்துவ கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 32,017 முகாம்களில் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டன.

மாநிலத்தில் 46 லட்சத்துக்கும் அதிகமாக தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. அதனால், தகுதியுள்ள அனைவருக்கும் விரைந்து தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீா்வு. கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்களில் 96 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள். உயிரிழந்தவா்களில் 4 சதவீதம் போ் மட்டுமே தடுப்பூசி செலுத்தியவா்கள். அவா்களும் வேறு இணை நோய்களினால் பாதிக்கப்பட்டே உயிரிழந்தனா்.

கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடலூா், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு உயா்ந்துள்ளது. நாள்தோறும் 20 போ் வரை டெங்குவால் பாதிக்கப்படுகின்றனா். தற்போது மருத்துவமனைகளில் 375 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அடுத்த 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். தங்களது வசிப்பிடங்களைச் சுற்றி மழை நீா் தேங்காமல் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை டெங்குவால் 3 போ் உயிரிழந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com