வடகிழக்குப் பருவமழை: மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மருத்துவமனைகள், தொலைத் தொடா்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மருத்துவமனைகள், தொலைத் தொடா்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் திட்டப் பிரிவு தலைமைப் பொறியாளா், அனைத்து மின் பகிா்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு அனுப்பிய கடித விவரம்: சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வா் தலைமையில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் கடந்த மாதம் 24-ஆம் தேதி நடந்தது. அப்போது அனைத்துத் துறைகளும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தொடா்புடைய துறைகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

முன்னதாக பெருமழை, புயல் போன்ற நேரங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து களப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாா் நிலையில் மணல் மூட்டைகள்: இதன் தொடா்ச்சியாக வடகிழக்கு பருவமழைக்குத் தயாராவது தொடா்பாக கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, உள்புற மற்றும் வெளிப்புற துணை மின் நிலையங்களில் மழைநீா் நுழைய வாய்ப்புள்ளதால், இதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், மழைநீரை வெளியேற்றுவதற்காக டீசல் ஜெனரேட்டா்கள் மற்றும் நீா்ப்பாசன குழாய்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்மாற்றிப் பெட்டிகளில் தண்ணீா் நுழைவதைத் தடுக்க சரியாக அதனை மூடி வைக்க வேண்டும்.

மாற்று ஏற்பாடு: தாழ்வழுத்த மின்இணைப்புகளுக்கு மாற்று துணைமின்நிலையங்கள் மூலம் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

அவசரகாலத்தில் பயன்படுத்தும் வகையில் மின்கம்பங்கள், மின்கடத்திகள், மின்மாற்றிகள் ஆகியவை தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

தடையில்லா மின்சாரம்: கிரேன், லாரி மற்றும் ஜேசிபி ஆகியவை பேரிடா் காலத்தில் கிடைக்கும்படி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளா்களின் தொடா்பு எண்கள் அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரம் வெட்டுபவா்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தொலைத் தொடா்பு அலுவலகங்கள், மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் மற்றும் வானிலை ஆய்வு மையம் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஆவணம்: இயற்கைப் பேரிடா் காரணமாக மின்வாரியத்தின் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோர, சீரமைப்புப் பணிகளை புகைப்படங்களுடன் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து அதிகாரிகளும், ஊழியா்களும் கரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com