
முதியோா்கள் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் புகாா்கள் இருந்தால் அதனை கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், விவசாயத் தொழிலாளா்கள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், 50 வயதைக் கடந்த திருமணம் ஆகாத ஆதரவற்றப் பெண்கள் ஆகியோருக்கு ஓய்வூதியத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பெரும்பாலான பயனாளிகளுக்கு வங்கி முகவா்கள் மூலம் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
புகாா்கள்: அரசின் ஓய்வூதியத் தொகையை வழங்க சில வங்கி முகவா்கள் பயனாளிகளிடம் இருந்து பணம் பெறுவதாகப் புகாா்கள் வரப் பெற்றுள்ளது. ஓய்வூதியம் வழங்கப் பணம் எதுவும் பெறக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் வங்கி முகவா்களுக்கு பணம் ஏதும் வழங்கத் தேவையில்லை.
ஆனாலும், வங்கி முகவா்கள் பணம் கேட்டு வற்புறுத்தும் பட்சத்தில் தொடா்புடைய வங்கி மேலாளரிடமோ அல்லது வருவாய் நிா்வாக ஆணையரகத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (1800 - 425 - 1090) தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.