உள்ளாட்சித் தேர்தல்: அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு சட்டக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காட்பாடி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு சட்டக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காட்பாடி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்கள்.

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 2,901 ஊராட்சித் தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு அக்டோபர் 6, 9-இல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 106 ஊராட்சித் தலைவர், 630 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 789 பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 9-இல் தேர்தல் நடைபெற்றது.
 9 மாவட்டங்களில் 79,433 பேரும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் 1,386 பேரும் என மொத்தம் 80,819 போட்டியிட்டனர்.
 போட்டியின்றி தேர்வு: இதில், 9 மாவட்டங்களில் 2,855 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 119 ஊராட்சித் தலைவர்கள் உள்பட மொத்தம் 2,981 பேரும், 28 மாவட்டங்களில் 347 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 18 ஊராட்சித் தலைவர்கள் என 365 பேர் என ஒட்டுமொத்தமாக 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
 இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிகளுக்காக அக்டோபர் 6, தேதியில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 9 மாவட்டங்களில் 77.43 சதவீத வாக்குகளும், 9-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சுமார் 41,500 வாக்குப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் 74 எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டிருந்தன.
 திமுக கூட்டணி முன்னிலை: அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டதுடன், எண்ணிக்கை பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து வந்த வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு குறைவான வாக்குகள் (வாக்குச்சீட்டுகள்) என்பதால், அவை உடனுக்குடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அரசியல் கட்சியின் சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்தும் அதிமுக, பாஜக, தமாகா, புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தும் இத்தேர்தலில் போட்டியிட்டன. இதில், 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக இருந்த மொத்தம் 153 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இரவு 12 மணி நிலவரப்படி, 99-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும், பாமக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
 1,421 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் சுமார் 530-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 92 இடங்களிலும், பாமக 27 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், தேமுதிக 1 இடத்திலும் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 48 இடங்களிலும் வெற்றி
 பெற்றுள்ளன.
 கண்காணிப்பு: வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை சென்னையில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஆணையர் வெ.பழனிகுமார், தேர்தல் ஆணையச் செயலர் சுந்தரவல்லி ஆகியோர் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com