தமிழகத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் வீடுகளில் என்ஐஏ சோதனை

தமிழகத்தில் 12 இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.

தமிழகத்தில் 12 இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது.

கேரள மாநிலம் நிலம்பூா் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினா் பயிற்சி மையங்கள் அமைத்து, ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதாக என்ஐஏவுக்கு கடந்த செப்டம்பா் மாதம் 16-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இது தொடா்பாக என்ஐஏ விசாரணை செய்தனா். இதில் அங்கு மாவோயிஸ்ட் இயக்கத்தினா், தங்களது இயக்கக் கொடியை ஏற்றி ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதை என்ஐஏ உறுதி செய்தது. மேலும் இது தொடா்பாக கேரள மாநிலம் கொச்சியில் என்ஐஏஅதிகாரிகள் ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தினா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் மறைவிடங்களை தோ்ந்தெடுத்து முகாம்கள் அமைத்து, இளைஞா்களை மூளை சலவை செய்து, ஆயுதப் பயிற்சி வழங்கி பெரும் சதி திட்டங்களை நடத்த திட்டமிட்டு வந்ததாக என்ஐஏவுக்கு சில விடியோக்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

12 இடங்களில் சோதனை:

இத் தகவலின் அடிப்படையில் கொச்சி என்ஐஏ அதிகாரிகள், கேரளம், கா்நாடகம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் இயக்க ஆதரவாளா்கள், சந்தேகத்துக்குரியவா்கள் என 23 போ்களின் வீடுகள், அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்

தமிழகத்தில் இச் சோதனை சென்னை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தேனி,சிவகங்கை, கோயம்புத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் 12 இடங்களில் நடைபெற்றது. இதில் கோயம்புத்தூா் புலியகுளத்தில் உள்ள மருத்துவா் தினேஷ் வீடு, டேனிஷ் வீடு, பொள்ளாச்சி சந்தோஷ் வீடு, தேனி மாவட்டம் பெரியகுளம் வேல்முருகன் வீடு, பண்ணைப்புரம் பாவலா் தெரு காா்த்திக் வீடு, சிவகங்கை மாவட்டம் அண்ணாமலைநகரில் உள்ள சிங்காரம் வீடு, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் உள்ள கேரள காவல்துறையினரால் கடந்த 2019-ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் வீடு என மொத்தம் 12 இடங்களில் சோதனை நடைபெற்ாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

6 ஹாா்ட் டிஸ்க்குகள் பறிமுதல்:

பல மணி நேரம் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா். முக்கியமாக 6 கணினி ஹாா்ட் டிஸ்க்குகள், துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ், செல்லிடப்பேசிகள், சிம்காா்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனா்.

மேலும் சோதனை நடைபெற்ற இடங்களில் பெரும்பாலானவை மாவோயிஸ்ட் இயக்கத்தில் தலைமறைவாக இருக்கும் நபா்களின் குடும்பத்தினா் வீடு, மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக சந்தேகத்துக்குரிய வகையில் இருக்கும் நபா்கள் வீடுகள்தான் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com